இலங்கை மண்ணில் நடப்பது என்ன? தமிழ் மக்களின் நகர்வு எவ்வாறு இருக்க வேண்டும்?

eelam23713b2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் இலங்கை மண்ணில் துப்பாக்கிச் சத்தங்கள் மௌனமாகின என்பது உண்மைதான்.

ஆனால் துப்பாக்கிச் சன்னங்களும், பீரங்கிக் குண்டுகளும் மழையெனப் பொழிந்த ஷெல் குண்டுகளும் விளைவித்த அனர்த்தங்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் தமிழ் மக்கள் இன்றும் மீள முடியாதுள்ளனர்.

*உறவுகளை இழந்தோரின் அழுகுரல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

*காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டு அறிந்து தடுமாறும் உறவுகள் கதறி அழுதுகொண்டிருப்பது இன்னும் தொடர்கதையாக உள்ளது.

*போரின் போது பறந்த துப்பாக்கிச் சன்னங்களையும் ஷெல் துகள்களையும் குண்டுத் தாக்குதல்களையும் தமது உடல்களில் சுமந்து அது தரும் வலியால் துடித்து அழும் துயரம் தொடர்ந்து கொண்டிக்கின்றது.

*குடும்பத் தலைவர்களை இழந்து கைப் பெண்ணான பெண்கள் குடும்பத்தைக்; கொண்டு நடத்த இயலாமலும், பிள்ளைகளின் பசியினைப் போக்க முடியாதும் உள்ள தாய்மாரின் அழு குரலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

*தமிழினத்தின் விடுதலைக்காக உயிரைப் போக்கிக் கொள்ளவும் கலங்காதவர்கள், தயங்காதவர்கள் இன்று கலங்கி அழுது நிற்பதும் ஓயவில்லை.

மொத்தத்தில் துப்பாக்கிகள் மௌனமாகிய மண்ணில் எழுந்த அவலக் குரல்களும், வேதனை, முனகல் சத்தங்களும், கலங்கி அழும் அஞ்சா நெஞ்சங்களும் அன்றாடக் காட்சிகளாக உள்ளன.

2009ஆம் ஆண்டு கிளிநொச்சி இலங்கையின் படைத் தரப்பினரிடம் வீழ்ச்சியடைந்தபோது அடுத்து என்ன? என்ற கேள்வி கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், நியாயமான நீதியான புத்திஜீவிகள் மட்டத்தில் பெரும் கேள்வியாக எழுப்பப்பட்டது.

ஒரு சில இராஜதந்திரிகள் குறிப்பாக இந்திய தூதரகத்தைச் சார்ந்தோர் போரின் முடிவுடன் உருவாகும் புதிய சூழலில் நடத்தப்படும் தேர்தலில் தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி, இன விவகாரங்களுக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பைச் சாத்தியமாக்கும் நிலையை அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்க முன்வரவில்லை.

அன்றைய ஆட்சியாளரின் நகர்வுகள் தீர்வை நோக்கியதாக அன்றி எதிர்மறையாக இருந்தமையினால் அடுத்து என்ன? என்பது மறக்கப்பட்ட ஒரு விடயமாகப் போனது.

ஆனால் இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களது வருகையும் ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உருவாக்கிய நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் வருகையுடன் அடுத்து என்ன? என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடையே பெருமளவில் பரவலாக ஏற்படத் தொடங்கியது.

தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பு குறித்த ஆவலை மேலும் தூண்டும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் 2016க்குள் தீர்வு வரும் என்று மிக உறுதியாகக் கூறியது அமைந்தது.

இதற்குச் சாதகமான சமிக்ஞைகளை ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் வெளிப்படையாகவே கூறத் தொடங்கினர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பேச்சுக்கள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிப்பாக தமிழரசுக் கட்சி நல்லாட்சி மீது அதீத நம்பிக்கை கொள்ள வைத்தது.

மறுபுறம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிலும் மனமாற்றத்தை ஏற்படுத்துவதில் நல்லாட்சி அரசாங்கம் கணிசமான அளவு வெற்றியையும் கண்டது.

இந்த ஒரு பின்னணியில் இலங்கை மண்ணில் நடப்பது என்ன? தமிழ் மக்களின் நகர்வு எவ்வாறு இருக்க வேண்டுமென்ற விடயங்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் மக்கள் கரைந்து போகின்றனர்

இலங்கை மண்ணில் தமிழ் மக்களை கரைந்து கலைந்து போக வைக்கும் விடயங்கள் மிக வேகமாக காத்திரமாக வெளியில் தெரியாதவாறு முன்னெடுக்கப்படுகின்றன.

2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தற்போதைய மாகாண எல்லைகளை மறுசீரமைத்தல், குடிப்பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்படுகின்றது.

அதாவது 2030 அளவில் சிதைக்கப்பட்ட தாயகக் கோட்பாட்டுக்குள் புதிய புவிசார் குடிப்பரம்பலுடனான அரசியல் மாற்றத்திற்குள் வடக்கு கிழக்குப் பகுதியை உள் வாங்குவதே மேற்கூறிய அரசியல் நகர்வின் நோக்கமாகும்.

காலத்தை இழுத்தடித்தல்.

இலங்கை வரலாற்றில் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தை ஆட்சி பீடமேறி அனைத்து அரசாங்கங்களும் செய்து வந்துள்ளன.

தமிழர் தரப்பு விடயங்களில் இழுத்தடிப்பை மேற்கொள்ளும் அரசாங்கங்கள் தமது இலக்கை நோக்கி மிக வேகமாக காய்களை நகர்த்துவதில் பின் நிற்பதில்லை.

அதாவது காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயம் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் அல்லது சிங்கள மக்கள் நலன் நோக்கிய விடயங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது இருக்குமானால் ஆபத்தில்லை.

ஆனால் தமிழர் விவகாரத்தில் இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளும் அதே வேளையில் தமிழர்களுக்கு விரோதமான போக்கினை விரைவுபடுத்துவதானது தமிழ் மக்களுக்குப் பாரிய பாதிப்பினை உருவாக்குவதாக அமைந்து விடுககின்றன.

எல்லை நிர்ணயக் குழு

தேர்தல் எல்லை நிர்ணயத்துக்கான குழுவின் பணிகள் துரித கதியில் செயற்படுத்துவதற்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழ் மகக்களைப் பொறுத்து இடம்பெயர்ந்தோரின் மீள் குடியேற்றம் இன்னும் முழுமை பெறவில்லை.

உண்மையில் தேர்தல் எல்லை நிர்ணயம் மக்கள் முழுமையாகக் குடியேற்றப்பட்ட பின் செயற்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் தமிழ் மக்களை முழுமையாகக் குடியேற்ற முன் வராத நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் எல்லை நிர்ணய விடயத்தை அவசர அவசரமாக நிறைவு செய்ய முயல்கின்றது.

ஜனத்தொகையின் பலமே ஜனநாயகத்தின் பலமாக உள்ளது.

இலங்கையின் ஜனநாயகப் பொறிமுறை நிலம் அதனுடன் இணைந்த வாக்காளர் தொகைக் கூடாக இயங்கும் வகையிலான கட்டமைப்பைக் கொண்டதாகவே உள்ளது.

குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு குறிப்பிட்ட ஒரு பகுதியில் போதுமான வாக்காளர்களைக் கொண்டிருப்பதன் மூலமே அந்த இனத்துக்காண நாடாளுமனற, உள்ளுராட்சி சபைகளுக்குமான பிரதிநிதிகளைக் கொண்டிருக்க முடியும்.

அந்த வகையில் ஜனத் தொகையின் பலம்தான் ஜனநாயகத்தின் பலமாக உள்ளது. இதற்கு அப்பால் இலங்கையில் தற்போது ஏதோ ஒரு வகையில் இன ரீதியான வாக்களிப்பு முறையே உள்ளது.

இதில் முஸ்லிம் மக்கள் தாம் ஒரு இஸ்லாமிய சமூகமாக மத நிறுவனங்களுக்கூடாக ஒருங்கிணைக்கப்படுவதால் அவர்கள் பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இது குறித்த முஸ்லிம் சமூகத்திடம் இருந்து நான் கற்றுக் கொண்ட அறிந்து கொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்றைய நிலையில் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக நகர்வுகளுக்கு உபயோகமான தகவல்களாக இருக்கலாம் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள இந்த மூலோபாய தந்திரங்களைப் பிழையென்று கூற வரவில்லை. முஸ்லிம் மக்களது நகர்வுகள் தமிழ் மக்களுக்கு ஒரு எடுகோலாக இருக்கலாம்.

1.முஸ்லிம் மக்கள் தமது இனத்துவ அடையாளத்தை இஸ்லாமிய சமூகமென்று வெளிப்படையாகவேப் பிரகடனப்படுத்தி தமது உரிமைகளைக் கோருவதுடன் அரசியல் உரிமைகளைளயும் வலியுறுத்தி வருகின்றனர்.

2.அவர்களது மார்க்கம் குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கவில்லை என்று காரணம் கூறி ஜனத்தொகையை மிக விரைவாகப் பெருக்கக் கூடியதாக இருக்கிறது.

*பலதூர மனம்,

*அதிகரித்த பிள்ளைகளின் எண்ணிக்கை

*முஸ்லிம் அதிகாரிகளைத் தமது அலகுகளுக்கு வைத்துக் கொண்டு ஜனத்தொகை இலக்கங்களைக் கூட்டிக் கூட்டுதல்.

ஒரு முழுமையானதும் துல்லியமானதுமான ஜனத்தொகைக் கணக்கெடுக்கப்படின் இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிககளாகவே இருப்பர்.

இதனை பிழை என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் தமது சமூக இருப்பாகத் தக்கவைப்பதற்காக ஒருங்கிணைந்த மூலோபாயத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

சிங்களவர்கள் செய்வதையே முஸ்லிம் மக்களும் செய்கின்றனர்.

1.ஜனத்தொகை அதிகரிப்பில் கவனமாக இருக்கின்றனர்

2.ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் தங்களது திரட்சியைக் காப்பாற்றிக் கொள்வதன் மூலம் உள்ளுராட்சி நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது.

3.சொத்து மற்றும் மூலதனம் திரட்சி.

முஸ்லிம் சமூகத்துக்கிடையில் சொத்துக்களைக் கைமாற்றுதல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள காணிகள், வர்த்தக நிலையங்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்குதல்.

4. தங்களது சமூகத்தை நிலை நிறுத்துதல். இதனைக் கல்விக்கூடாக நிலை நிறுத்துதல்.

சர்வதேச கல்லூரிகள் மற்றும் தொழில்சார் கல்வி போன்றவற்றில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

இதுதான் இலங்கையின் முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மூலோபாயமாகும். முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பலருக்கு 8ஆம் வகுப்புக் கல்வித் தகைமையுடன் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தபட்டனர்.

இது குறித்து தமிழ் மக்களிடையே இருந்து பிழையான விமர்சனமே எழுந்தது. அதாவது இத்தகைய ஆசிரியர் நியமனங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி பாதிக்கப்படும் என்ற வாதத்தையே தமிழர் தரப்பு முன் வைத்தனர்.

ஆனால் முஸ்லிம் மக்கள் பதியுதீன் அவர்களால் வழங்கப்பட்ட சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பல்கலைக்கழகங்களுக்கான நுழைவில் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தி சிங்கள சமூகம் எவ்வாறு தன்னை கல்வியில் நிலைநிறுத்திக் கொண்டதோ அதே போல் முஸ்லிம் சமூகமும் பதியுதீன் அவர்களது மூலோபாயத்தின் மூலம் கல்வி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகமாக மாற்றமடைந்து வருகின்றது.

முஸ்லிம் சமூகம் சமூக மூலதனத்தை நிதி மூலதனத்துக்கப்பால் சமூகத்திற்கிடையிலான இறுக்கமான உறவு மூலம் இதனைச் சாத்தியமாக்குகின்றனர்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை வாங்கி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல், வர்த்தக முயற்சிகளுடன் தமது உற்பத்திகளை முஸ்லிம் சமூகத்திற்கிடையிலேயே சந்தைப்படுத்தி சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற் பயன்படுத்திக் கொள்ளுதல்.

இது போன்ற அணுகு முறையோ, தந்திரோபாயமோ வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களிடம் இல்லை.

யூத இனம் தம்மைக் கட்டமைத்துக் கொள்வதற்குக் கைக்கொண்ட கோட்பாடு சியோனிசம். ஆனால் தமிழ்ச் சமுகம் எத்தகைய கோட்பாடும் இன்றி உள்ளது.

தூரநோக்கு கொண்ட தலைவர்கள் இல்லை

தமிழ்ச் சமூகத்தில் அரசியல்வாதிகள் தூரநோக்கு கொண்ட தலைவர்களாக இல்லை. பதவிகள், வாக்கு வங்கியைத் தக்கவைப்பதிலேயே தமிழ்த் தலைவர்களும், அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தை முன் நகர்த்துதல் குறித்த சித்தாந்தம் தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை. தமிழர் அரசியலில் உள்ள பெரும் குறைபாடு இதுவாகும்.

முஸ்லிம் மக்கள்; தமது மத நிறுவனங்களுக்கூடாக அரசியல்வாதிகளை வழி நடத்துகின்றனர். சிங்கள மக்களின் பாதுகாவலனாக அரசு உள்ளது.

இதற்கும் அப்பால் பௌத்த பீடங்கள் அரசாங்கங்களில் செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்களாக உள்ளன. அதாவது இலங்கை அரசு, அரசாங்கங்கள் பௌத்த பீடங்கள் ஆற்றும் பணியினை முஸ்லிம் சமூகம் தனது சமூகத்துக்காக வினைத்திறனுடன் மிகக் காத்திரமாக மேற்கொள்கின்றது.

குறிப்பாக முஸ்லிம் அரசியலை நோக்கும்போது சிங்களப் பாணியிலான அரசியல் அணுகுமுறைகளையே முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் கைக்கொள்கின்றனர்.

சிங்கள அரசியல்வாதிகளும், கட்சிகளும் எவ்வாறு பிரிந்து நின்று தமிழ் மக்களை ஆள்கின்றனரோ அதே பாணியில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பிரிந்து நின்றும், தேசியக் கட்சிகளுடன் இணைந்தும் நின்று முஸ்லிம் இனத்துக்கான அரசியலை மேற்கொள்கின்றனர்.

அதற்கும் அப்பால் இதுவரை கரையோர மாவட்ட தனி அலகு குறித்து பேசி வந்த முஸ்லிம் சமூகம் தென்னிலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றைக் கவனத்தில் எடுத்து கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கும், இருப்பிடத்துக்குமான பகுதியாக மாற்றியமைத்துக் கொள்வதில் முனைப்புக்காட்டுகின்றனர்.

பௌத்த பீடங்கள் ஆற்றும் பணியினை முஸ்லிம் சமூகம் தனது சமூகத்துக்காக வினைத்திறனுடனும் மிகக் காத்திரமாக மேற்கொள்கின்றது.

குறிப்பாக முஸ்லிம் அரசியலை நோக்கும்போது சிங்களப் பாணியிலான அரசியல் அணுகுமுறைகளையே முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் கைக்கொள்கின்றனர்.

இஸ்லாமிய மக்கள் மத, இன அடையாளங்களுக்காகத் தம்மை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சிங்கள மக்களுக்கு இலங்கை அரசு பாதுகாவலனாக இருப்பது போன்று முஸ்லிம்கள் தமக்கான பாதுகாவலர்களாக மத்திய கிழக்கு நாடுகளை வரித்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் நிலவும் ஜனத் தொகை ஜனநாயகத்திற்குள் தமிழ்;ச் சமூகம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதாயின் சிங்கள, முஸ்லிம் சமூகங்களைப் போல் தனக்கென வினைத்திறன்மிக்க காத்திரமான மூலோயபாயங்களை கடைப்பிடித்தாக வேண்டும்.

இலங்கையில் நீடித்து, நிலைத்திருக்கக் கூடிய சமாதானம் நிலவ வேண்டுமெனில் பல்லின மக்களின் அடையாளங்களை அங்கீகரித்து ஒவ்வொரு சமூகமும் அரசியல், சமூக, பொருளாதாரத்துறைகளில் சமமான வலுக்கொண்டவர்களாக மாற்றப்பட்டு, ஒரு ஆரோக்கியமான போட்டி கொண்ட சமூக அமைப்பு உருவாக்கப்படும் போதே நீடித்த சமாதானம் சாத்தியமாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பணி

1.வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் மக்கள் தமது அடையாளங்களுடன் இலங்கைச் சமூகத்திற்குள் நிலை கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்து இலங்கை யார் என்ற அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கு குறைந்தது 50 வருடங்களாவது தேவைப்படும்.

சிங்களச் சமூகம் ஜனத்தொகைப் பெ ரும்பான்மையால் உருவாக்கப்படும் அரசாங்கத்தை வைத்துக்கொண்டு தமது இன, மத. சமூக அடையாளங்களை ஒருங்கிணைப்பது போல் முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்றது.

இந்தப் பின்னணியில் சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் மூலோபாயங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் போது தமிழ்ச் சமூகம் எவ்வித மூலோபாயங்களும் இல்லாது இருக்குமாயின் அது தானாகவேக் கரைந்து போகும். தற்கொலை அணுகுமுறையாகவே இருக்கும்.

இது தமிழ்ச் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினரை மீண்டும் விரக்தியின் பிடிக்குள் தள்ளப்படும் போது நாட்டில் தற்போது நிலவுவதாகக் கூறப்படும் அமைதி சீர் குலையவும் இனங்களுக்கிடையில் அமைதி இன்மை தோன்றுவதற்குமே வழி வகுக்கும்.

அடுத்து செய்ய வேண்டியது என்ன?

1.அரசு.

அரசியல் தீர்வினை முன் வைத்து நடை முறைப்படுத்த வேண்டும். அரசியல் தீர்வு தாமதமாகும் பட்சத்தில் மாற்றீடாக தற்காலிக இடைக்கால நிர்வாக ஒழுங்குமுறையை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்.

விரைந்த அரசியல் தீர்வு, தாமதமாகும் பட்சத்தில் தற்காலிக இடைக்கால நிர்வாக சபை என்பது தமிழ் மக்கள் நெருக்குதல்கள், பாதிப்புக்களில் இருந்து சற்று மூச்சு விட இடம் அளிப்பதாக அமையும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தவுடன் சர்வதேச சமூகம் இன விவகாரத்துக்கான அரசியல் தீர்வு காணும் வரை இடைக்கால நிர்வாகத்தை முன்மொழிந்து செயற்படுத்தியிருந்தால் நிச்சயமாக அரசும், சிங்கள தேசியவாதிகளும் விரைந்து ஒரு அரசியல் தீர்வுக்கு முன் வந்திருப்பர்.

தற்போதும் கூட சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிணை எடுப்பதற்கு அரசியல் தீர்வு காணப்படுவதான உறுதி மொழியே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் தீர்வு குறித்து ஆக்கப்பூர்வமான நகர்வுகள் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஒரு தற்காலிக இடைக்கால நிர்வாக சபை ஒழுங்குக்கு முன் வருமாறு சர்வதேச சமூகம் இலங்கையின் இன்றைய நல்லாட்சியினரிடம் முன்மொழிந்து செயற்படுத்த முன் வர வேண்டும்.

சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தியேனும் இந்த முடிவுக்கு வருமாக இருந்தால் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் தீர்வினை விரைந்து முன்வைக்கும்.

தமிழ்ச் சமூகம், தமிழ்க் கட்சிகள், குறிப்பாக தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் அமைப்புக்களும் ஒரு தற்காலிக இடைக்கால நிர்வாக சபை குறித்த ஒழுங்கமைப்புக்கு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் வற்புறுத்த வேண்டும்.

2.தமிழ்ச் சமூகம்.

சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் தம்மை நிலை நிறுத்துவதற்கேற்ற மூலோபாய தந்திரங்களைக் கொண்டிருப்பதைப் போன்று தமிழ்ச் சமூகமும் தன்னை நிலை நிறுத்துவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்கும் கண்டறிந்த மூலோபாயங்களை அரசியல் கட்சிகள் வேறுபாடுகள் இன்றி ஒருங்கிணைந்து செயற்பட, செயற்படுத்த முன்வர வேண்டும்.

1.தமிழ் மக்களுக்கான ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் மாகாண சபைகள், மற்றும் உள்ளுராட்சி சபைகளில் காப்பாற்றிக் கொள்வதற்கான சூத்திரத்தைக் கண்டாக வேண்டும்.

தற்போது யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்றத்திற்கான ஆசனம் 24 வாக்காளர்கள் குறைவு என்ற காரணம் காட்டப்பட்டு 6 இல் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுதல் பொருந்தும்.

2.தமிழ்ச் சமூகம் தனக்கென ஜனத் தொகைக் கோட்பாட்டை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும்.

3. தமிழ்ச் சமூகத்தின் சொத்து திரட்சி, மூலதன திரட்சி, தொழில் முனைப்பு ஆகிய வற்றைத் திட்டமிட்டு வலுவூட்டி விரிவுபடுத்த வேண்டும்.

4. தமிழிச் சமூகத்தின் மனித வளத்தை எவ்வாறு மேம்படுத்துதல் என்பது குறித்து கண்டறிந்து அமுலாக்க வேண்டும்.

5.இலங்கைக்கு வெளியிலும் உள்ள அரச, அரச சார்பற்ற, தேசிய, சர்வதேச நிறுவனங்களுக்குள் உள்ள வெற்றிடங்களைக் கையகப்படுத்துவதன் மூலமும் சக தமிழர்களுக்கு அவ்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் சமூக மூலதனத்தை கட்டியெழுப்பி வலுவூட்டப்பட வேண்டும்.

6.தமிழ்ச் சமூகம் தனக்கென அரசியல் கட்சிகளுக்கப்பால் சிந்தனைக் குழாம் ஒன்றினை முழுமையாக ஈடுபாடு கொண்ட குழுவை உருவாக்க வேண்டும்.

சிந்தனைக் குழாம் தமிழ்ச் சமூகம் குறித்த ஒட்டு மொத்த இருப்பை எடுத்து அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு உலக ஒழுங்கிலும், இலங்கையின் தேசிய ஒழுங்கிலும் தமிழ்ச் சமூகத்தை நிலை நிறுத்துவதற்கான இலக்குகளையும், மூலோபாயங்களையும் வகுக்க வேண்டும்.

வங்கி

தமிழ்ச் சமூகத்துக்கென அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படல் வேண்டும். உதாரணமாக இஸ்லாமிக் வங்கி, குஜராத் வங்கி

பென்சன் நிதி

தமிழ்ச் சமூகத்துக்கென பென்சன் நிதி உருவாக்கப்பட வேண்டும்.

1.போரினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையைக் கொண்டு நடத்த இயலாதவர்களுக்கு இந் நிதி திசை திருப்பப்பட வேண்டும்.

இதில் மருத்துவ உதவி, மாதாந்தக் கொடுப்பனவு என்பன உள்ளடக்கப்பட வேண்டும். இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட படைத்தரப்பினரை அரசாங்கம் உதவுகின்றது.

ஆனால் போரில் பங்கு பற்றிய போராளிகளை அரசாங்கம் கைவிட்டுள்ளது. மறுபுறம் இவர்கள் எந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடினார்களோ அவர்களை தமிழ்ச் சமூகமும் கைவிட்டுள்ளது.

இவர்களைப் பாதுகாக்க வேண்டியதும், அவர்களது நலனைப் பேண வேண்டியதுமான பாரிய கடப்பாட்டை தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது.

இது இரக்கத்தின் அடிப்படையிலோ அல்லது அனுதாபத்தின் அடிப்படையிலோ அல்ல என்பதை தமிழ்ச் சமூகம் உணர வேண்டும்.

மனிதவள அபிவிருத்தி

தமிழ்ச் சமூகம் சார்ந்தவர்களின் தொழில் நுட்ப தகைமைகளைக் கூட்டுவது தமிழ்ச் சமூகத்தின் கடமையும் பொறுப்புமாகும்.

மலையக மக்கள்

1.பெருந் தோட்டப் பொருளாதாரம் சிதைவடைந்து வருகின்றது.

2.தோட்டப் காணிகள் துண்டாடப்படுகின்றன. சிங்களக் குடியேற்றத்திற்காகவும், நகர, மாநகர அபிவிருத்திகளுக்காகவும், காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன.

3.தோட்டங்களில் வேலையின்மை வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனால், பெரும்பாலான மலையக இளைஞர், யுவதிகள் கொழும்பு போன்ற நகரங்களுக்கு வேலையாட்களாக அதாவது வேறு சமூகங்கள் செய்ய முன்வராத கண்ணியம் குறைந்த வேலைவாய்ப்புகளில் உள்வாங்கப்படுகின்றனர்.

இது மலையக வாக்கு வங்கியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லன.

மாற்றீடு

1.மலையக மக்கள் வேறு ஒரு இடத்தில் பொருளாதார பலத்தையும், தமது வசிப்பிடங்களில் அரசியல் பலத்தையும் உருவாக்கலாம்.

அல்லது

2.புதிய பொருளாதார வலயங்களைத் தேடி அங்கு பொருளாதார பலத்தையும், அரசியல் பலத்தையும் கட்டியெழுப்பலாம்.

மொத்தத்தில் தமிழ்ச் சமூகம் புதுப் பிரசவம் எடுத்து புதிய பாணியில் பயணிக்க முன்வர வேண்டும்.

தமிழ் மக்கள் முன் உள்ள சவால்கள்

தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற சவால்களைப் பார்ப்பதற்கு முன்னர் 1963 ஆம் ஆண்டில் என்ன நடை பெற்றது, தமிழ் மக்களுக்கெதிராக எத்தகைய சதி என்பதை சற்று பார்ப்போம்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கெதிரான வரலாறு மீண்டும் பின் நோக்கி 1963 ஆம் ஆண்டினை நோக்கி திசை திரும்பியுள்ளது.

அமைதியாக இருந்த கிழக்குத் தமிழர்கள் மீது சிங்களம் மாத்திரம் கொள்கையை மிக காத்திரமாக நடைமுறைப்படுத்தும் கட்டளையுடன் நெவில்லே ஜயவீர அவர்களை சிறிமா அம்மையாரால் 1963ஆம் ஆண்டு அரச அதிபராக யாழ். மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டார்.

சிங்களம் மாத்திரம் கொள்கைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பு அடுத்த 25 வருடங்களில் துப்பாக்கி ஏந்திய கலகமாக மாற்றமடையும்.

அதனை எதிர்கொள்வதற்கு தற்போதே அதாவது 1963லேயே ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என நெவில்லே ஜயவீரவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அது மாத்திரமல்ல தமிழ் தொழில்சார் நிபுணர்களான சட்டத்தரணிகள், வைத்தியர்கள் போன்றோர் தமிழர் விவகாரத்தில் கொண்டுள்ள கட்டுப்பாட்டை இழப்பர்.

அந்த இடத்தை தீவிரவாத இளைஞர்கள் கையேற்பர். எனவே தற்போதே சங்கிலித் தொடர் போன்று வட மாகாணத்தில் படை முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் வழங்கப்பட்டது.

படை முகாம்கள் நிறுவப்படுவதை நியாயப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி வரும் கள்ளக் குடியேற்றவாசிகள் மற்றும் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி மேற்கொள்ளப்படும் கடத்தல் போன்ற இரு தேசிய பிரச்சினைகளை முறியடிப்பதற்கே படை முகாம்கள் என்ற வாதத்தை முன் நிறுத்துதல் என்பதாகும்.

அதே பாணியில் அதாவது 1963இல் கிளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காக படை முகாம்களை அமைத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு தீவிரவாதம் மேல் எழக் கூடாது என்பதை இலக்காகக் கொண்டு வடக்கில் மீண்டும் படை முகாம்களை ஸ்திரப்படுத்துவதிலும் நவீன மயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது.

1963 இல் கள்ளக் குடியேற்றம், கடத்தல் போன்றவற்றைக் காரணம் காட்டிய இலங்கை அரசு இன்று போதைவஸ்து கடத்தல், வட பகுதியில் கலாசார சீர்கேடு போன்ற பல்வேறு விடயங்களை முன் வைத்து படை முகாம்களைப் பலப்படுத்தி வருகின்றது.

இரு விடயங்களுமே அமைதியாக இருந்த மக்கள் மீது திணிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே உள்ளது.

தமிழ் மக்கள் 1963 அரசியல் நிலைக்குத் திரும்பிவிடடனர்.

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி நிர்வாக அலகுடன் தமது அரசியல் பயணத்தைத் தொடர்வதற்குத் தயாராக இருக்கின்றனர்.

அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயாவும் இதனையே வலியுறுத்திக் கூறுகின்றார்.

ஆனால் இலங்கை அரசின் கட்டமைப்பு தமிழ் மக்கள் மீது இன்னொரு அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நகர்வுகள் இலங்கையில் நிலையான, நீடித்த சமாதானத்தைத் தோற்றுவிக்கவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கவும் உதவப் போவதில்லை.

நீடித்த, நிலையான சமாதானமும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், நல்லுறவும் அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயாவின் கூற்று பொய்த்துப் போகக் கூடாது.

நல்லாட்சியின் பிதாமகன்களான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமிழர் விவகாரம் குறித்து முன் வைக்கும் வார்த்தைகள் உறுதி மொழிகள் என்பன தகர்ந்து போகும் வார்த்தைகளாகவோ, தகர்க்கப்படும் உறுதி மொழிகளாகவோகப் போய்விடக் கூடாது.

அமைதியை விரும்பும் தமிழ் மக்களின் உண்மை இதயசுத்தியான மன நிலைக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்.

எனவே இலங்கை அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்காது விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும். இல்லையேல் தீர்வு முன் வைக்கப்படும் வரை ஒரு தற்காலிக இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தரப்பினரும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் அதே வேளை சர்வதேச சமூகத்துக்கூடாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை அரசியலில் முகமூடிகள் மாறி இருக்கின்றன. 1963 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்று இலங்கையின் ஆட்சி பீடத்தில் பலர் மாறி மாறி அமர்ந்துள்ளனர்.

இன்று தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதம மந்திரியாக ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.

ஆனால் அரச நிர்வாக பொறி முறையும், கொள்கை வகுப்பாளர்களும், அவர்களது நிகழ்ச்சி நிரலும் மாற்றத்துக்குற்படாது அப்படியே உள்ளன.

ஆட்சியில் இருப்போர் வெளிப்படையாக எதைப் பேசினாலும் நடைமுறையில் இந்தக் கட்டமைப்பு எந்த விதமான நெகிழ்வுத் தன்மையையோ அல்லது மாற்றத்தையோ அல்லது புதிய அணுகு முறையையோ வெளிக்காட்ட முன் வரவில்லை.

அந்த வகையில் நல்லாட்சியின் பிரதிநிதிகள் தமது காலத்தில் தேசிய இன விவகாரத்துக்குத் தீர்வைக் காண்பதா அல்லது சிங்களப் பெருந் தேசியவாதத்துடன் முரண்படாமல் போவதா என்பது தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவருக்கும் முன் உள்ள பெரிய சவாலாகும்.

இது போன்ற ஒரு சவாலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையிலேயே சந்திரிகா அம்மையார் தான் கொண்டு வந்த இன விவகாரத் தீர்வையே கைவிட நேர்ந்தது என்பதை இங்கு சுட்டிக் காட்டுதல் பொருந்தும்.

தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பலவீனம் அடைந்து போவதா அல்லது ஓரளவுக்குக் கீழ் பலவீனமாகிப் போய்விடக் கூடாது என்பதா? இதுவே இன்றுள்ள கேள்வியாகும்.

ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கெதிரான சக்தி இருக்கின்றது என்பதை உலகத்துக்குக் காட்ட மகிந்த ராஜபக்ச அணி தேவைப்படுவதாகவே இன்றைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.

அமைதியாக இருந்த தமிழ்ச் சமூகத்தின் மீது சிங்கள மொழியைத் திணிக்கின்றனர். அதற்கு சாத்வீக வழியில் எதிர்ப்புக் காட்டப்பட்ட போது இராணுவ முகாம்களை அமைக்கின்றனர்.

இராணுவ முகாம்கள் அமைப்பதை நியாயப்படுத்துவதற்கு கள்ளக் குடியேறறம், கடத்தல், குற்றச் செயல்கள் போன்றவைகள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

1963 இல் நடைபெற்றது 2009க்குப் பிறகு அமைதி திரும்பியதாகக் கூறப்படும் வடக்கில் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றது.

அதாவது இராணுவத்தின் பிரசன்னத்தையும், இராணுவ முகாம்களின் இருப்பையும் நியாயப்படுத்தும் வகையில் தற்போது,

1.வடக்கில் போதைப் பொருள் பாவனை

2.போதைப் பொருள் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படுவது.

3.குடா நாட்டில் இடம் பெறும் குற்றச்செயல்கள், காடைத்தனங்கள், வாள் வெட்டுக் கலாசாரம் போன்றவைகள் காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

4.அத்துடன் மக்களை அச்ச நிலைக்குள் தள்ளி இராணுவப் பிரசன்னத்தை மக்கள் கோரும்படி தூண்டப்படுகின்றது.

இதில் விசித்திரம் என்னவெனில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொலிஸ், இராணுவம் நிலை கொண்டுள்ள வடக்கில் மேற் கூறிய கடத்தல், போதைவஸ்து பாவனை, பாலியல் வல்லுறவு, காடைத்தனம், வாள்வெட்டுக் கலாசாரம் போன்றன பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டை மீறி எப்படி நடைபெறுகின்றது என்பது தான்.

அந்த வகையில் இதற்குப் பின்னால் உள்ள அரசியல், இராணுவ நலன்களை உணர்ந்து கொள்வதற்கு தமிழ் மக்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்பதை நீங்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒத்துக்கொள்ளும்.

அப்படியாயின் தமிழ்ச் சமூகம் தனக்குத்தானே புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டு புதுப் பிரசவம் எடுக்க வேண்டும்.

தமிழர் விவகாரம் சர்வதேச உறவுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக உள்ளது. தமிழர் விவகாரம் குறித்து சர்வதேச உறவுகளில ஏற்படும் மாற்றங்களே தமிழர் விவகாரத்துக்கான தீர்வினையும், இலங்கை மீதான அழுத்தத்தையும் உருவாக்கும் என்பதை தமிழர் தரப்பு உணர வேண்டும்.

அந்த வகையில் தமிழர் தரப்பினரின் ராஜதந்திர நகர்வுகள் இலங்கை அரசாங்கங்களையும் சர்வதேச சமூகத்தையும் வெற்றி கொள்வதாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அமெரிக்காவினதும், இந்தியாவினதும் பங்களிப்பை மறுப்பதற்கில்லை.

-http://www.tamilwin.com

TAGS: