தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான தன்மை இல்லாமல் காணப்படுகிறது.
அதாவது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் எவ்வாறான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பது தொடர்பிலேயே இவ்வாறு தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.
சர்வதேச சமூகமானது தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமா அல்லது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமா?
ஆலோசனை மட்டத்தில் தனது தலையீட்டை வரையறுத்துக் கொள்ள வேண்டுமா? என்பது தொடர்பில் சர்வதேசத்திற்கே தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபனிடம் தமிழர் தரப்பானது பல்வேறு முக்கியமான விடயங்களை வலியுறுத்திக் கூறியிருக்கிறது.
அந்தவகையில் எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக்கூடிய வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாகவிருந்தால் எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
இதற்காக கனடா, இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான உந்துதலை வழங்கவேண்டும் என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நாட்டின் தேசிய இனமாகவிருக்கும் தமிழ் மக்களுக்கு சமத்துவம் வழங்குகின்ற வகையிலும் முழுமையாக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் இதுவரை காலமும் இருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடாவின் பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதற்கும் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சமாதானம் கிட்டுவதற்கும் இலங்கைக்கு உதவுவதற்கும் கனடா உறுதிப்பாட்டுடன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் அர்த்தபுஷ்டியான சர்வதேச ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை நாம் அவதானத்தில் கொண்டுள்ளோம்” என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை சில விடயங்களை நிறைவேற்றியுள்ள போதிலும் இன்னும் அதிகமான விடயங்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதாகவும் கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையும் கனடாவும் இணை அனுசரணை வழங்கிய இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பான விடயத்தில் மனித உரிமைகள் பேரவை மற்றும் அதனது பொறிமுறைகள் தொடர்பில் இலங்கையின் சாதகமான ஈடுபாட்டை கனடா வரவேற்கிறது.
இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் காணப்பட்டுள்ள முன்னேற்றத்தையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம் எனவும் கனடா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் யுத்தத்தில் காணப்பட்ட வேதனைகள் இன்னும் ஆழ்ந்து காணப்படுவதுடன், உணர்வுகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. நல்லிணக்க பயணம் என்பது நீண்டதாகவும் தடங்கல்கள் பரவியதாகவும் இருக்கும்.
எனினும், எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும் எனவும் கனடா வெளிவிவகார அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாறு பார்க்கும்போது சர்வதேச சமூகம் இலங்கையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றமை தெளிவாகின்றது.
குறிப்பாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் காணப்படுவதாகவும் கனடா வலியுறுத்தியிருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் தரப்பானது அரசியல் தீர்வு விடயத்தை சர்வதேச சமூகத்தின் மீது அபார நம்பிக்கையை வைத்திருக்கிறது.
குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அரசாங்கம் தீர்வு திட்டம் ஒன்றை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் உந்துதலையும் அழுத்தத்தையும் பிரயோகிக்க வேண்டும் என தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது.
அதன்காரணமாகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தமது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூறி வருகிறது.
எனவே, இந்த நிலைமை தொடர்பில் அரசாங்கம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தீர்வுத்திட்டத்தை காண்பதற்கு புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது அரசியல் தீர்வு விடயத்தில் வரலாற்றில் இலங்கையானது கற்றுக் கொள்ள வேண்டிய பல்வேறு பாடங்கள் காணப்படுகின்றன.
இலங்கை மட்டுமல்லாது சர்வதேச சமூகமும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஆனால், இன்றுவரை இந்த உடன்படிக்கையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட விடயங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி முன்னெடுக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
இதன்மூலம் சிறுபான்மை சமூகத்துக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச பங்களிப்பானது எந்தளவு தூரம் சாதகமாக அமையும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டிய தேவை எழுகிறது.
அதாவது சர்வதேச சமூகம் எந்தளவுதூரம் அழுத்தத்தை பிரயோகித்தாலும் அதன் மூலம் தமிழ்பேசும் சிறுபான்மை மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பது ஆராயப்பட வேண்டியதாக காணப்படுகிறது.
அதனால்தான் இந்த விடயத்தில் தெளிவற்ற தன்மை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே, இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ்பேசும் மக்களும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு தீர்வு விடயத்தில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.
3 மில்லியனுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற நிலையில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பை ஒருபோதும் நிராகரித்துவிட முடியாது.
இந்த விடயத்தில் ஏதோ ஒருவடிவில் சர்வதேசத்தின் பங்களிப்பு இடம்பெற வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது. அதனால் அனைவரும் புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பை முற்றாக நிராகரிக்கும் வகையில் செயற்படவில்லை என்பது ஆறுதலான விடயமாகும்.
இதன் காரணமாக தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது தொடர்ந்தும் எட்டாக்கனியாக இருந்து வருகின்ற நிலையில் தற்போதைய நிலைமையில் பயன்பெற்று அதற்கு ஒரு முடிவை கண்டுவிட வேண்டும்.
இந்த செயற்பாட்டில் சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான மற்றும் யதார்த்தமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
-http://www.tamilwin.com