உலக அரங்கில் போராட்டத்தினை முன்நகர்த்த தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

tamileelamஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் கடந்த 25ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினரால், லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கிய திரு.சத்தியசீலன் தீபம் ஏற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு, படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் எதிர்காலத்தில் தமிழர்களுக்கு உரிய நிரந்தர பாதுகாப்பினை உறுதிப்படுத்த சர்வதேச நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்னும் தொனிப்பொருளில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கருத்துக்களை வெளிக் கொண்டு வந்திருந்தனர்.

இக் கூட்டத்தில் முக்கிய அதிதியாக ஊடகவியலாளரான கலம் மக்ரே (Callum Macrae) உட்பட மனித உரிமை ஆர்வலர்கள், சமூகத் தலைவர்கள், பிரித்தானிய வாழ் தமிழர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையினை சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் ஒரு முறை தெரியப்படுத்தும் முகமாக இக் கலவரத்தின் சாட்சியாளர்களின் சாட்சிப் பதிவு ஒளி நாடா வடிவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஐ.நா மனித உரிமை கழக கூட்டத் தொடரில் முக்கியமான நாடுகளிற்கு கையளித்த புதிதாக கட்டப்பட்டு வரும் பௌத்த சின்னங்கள் மற்றும் விகாரைகள் தொடர்பான ஆவணத்தின் காணொளி பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக இந் நிகழ்வில் தலைமை தாங்கிய வழக்கறிஞர் சிவானி ஜெகராஜா (Shivani Jegarajah), மனித உரிமை ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ (Ruki Fernando) மற்றும் சேனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே ஆகியோரின் கருத்துக்கள் பகிரப்பட்டதுடன் பார்வையாளர்களினால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது. தமிழர்களின் நடப்பு மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

கருத்துச் செறிவான இந்த நிகழ்வு உலக நாடுகள் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தமிழ் மக்கள் வாழாவிராது தம் சக்தியைத் திரட்டி உலக அரங்கில் தொடர்ச்சியாக மிகவும் காத்திரமான வடிவில் போராட்டத்தினை நகர்த்த வேண்டும் என்ற பதிவினை மேற்கொண்டது.

-http://www.tamilwin.com

TAGS: