அகதிகளுக்கு 20,000 டொலர்கள்: சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியாவின் முயற்சி

agathiஇலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல ஆபத்துமிகுந்த நாடுகளின் அகதிகள் அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். புகலிட கோரிக்கை கேட்ட இவர்கள் பல ஆண்டுகளாக மனுஸ்தீவின் தடுப்பு முகாமில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்லும் அகதிகளுக்கு 20,000 டொலர்கள் உதவி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு அகதிகளை சமரசம் செய்து வருவதாக Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் லான் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.

10,000 டொலர்களாக இருந்த அரசின் சலுகை பப்புவா நியூ கினியா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து 20,000 டொலர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார் ரிண்டோல்.

ஆனால் இதன் பிறகும் கூட வெகு சிலரே அரசின் 20,000 டொலர்கள் சலுகையை ஏற்க முனைவதாக கூறியுள்ள ரிண்டோல், இதன் மூலம் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானோர் பயத்தின் காரணமாக சொந்த நாட்டிலிருந்து வெளியேறிய உண்மையான அகதிகள் என தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பப்பு நியூ கினியா நீதிமன்றம் புகலிட கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றதோடு அப்படியான முகாம்களை மூடுவதற்கும் உத்தரவிட்டது.

இச்சலுகை தொடர்பான தகவலினை அவுஸ்திரேலிய அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே சமயம் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல விரும்பும் அகதிகளுக்கு பயண உதவி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அகதிகள் தொடர்பாக கடுமையான கொள்கைகளை கையாண்டு வரும் அவுஸ்திரேலிய அரசு, அகதி வெளியேற்றுவதற்கு இது போன்ற முயற்சிகளையும் கையாளக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். மனுஸ் தீவில் ஊடகங்களை அனுமதிக்க அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து மறுத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com