இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
“இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வுக் காலத்தில் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், இதனால் சில போராளிகள் உயிரிழந்ததாகவும், பலரும் பலவீனமாக நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வின்போது, முன்னாள் போராளியொருவர் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் பதிலுரைத்துள்ள இராணுவப் பேச்சாளர், “நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்துவிதமான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு சமயத்தில், கடந்த 8 வருடங்களாக இல்லாத குற்றச்சாட்டுகளை, இப்போது பொய்யாக முன்வைத்து வருகின்றனர். இது, நல்லிணக்கத்தைக் குழப்பும் சதி வேலையாகும். வதந்திகளால், மக்களைக் குழப்பி, இலாபமடைவதற்கே சிலர் முயன்று வருகின்றனர்.” என்றுள்ளார்.
-http://www.puthinamnews.com