இலங்கையில் அரசியல், சட்டச் சிக்கல்களால் தமிழ் கைதிகள் விடுதலையாவதில் தாமதம்!

sumanthiran_mp_001இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, 2015ம் ஆண்டு இறுதிக்குள் விடுதலை செய்து விடுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அரசியல், சட்ட ரீதியான சிக்கல்களால் அவர்கள் விடுதலையாவதில் தாமதம் நீடிக்கிறது.

சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யுமாறு பல முறை விடுதலைப் புலிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், ஒவ்வொரு முறையும் தங்களுக்கு ஆதரவாக அரசிடம் இருந்து வாக்குறுதிகள் வருவதால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளும் அவர்கள், பிறகு ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து கொழும்பு, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளின் முன் “அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய அமைப்பு’ என்ற அமைப்பு இன்று திங்கட்கிழமை போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்த் தேசிய கூட்டணிக் கட்சியின் எம்.பி.யும், மூத்த வழக்குரைஞருமான எம்.ஏ. சுமந்திரன், நாளிதழ் ஒன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில்,

இலங்கையில் மைத்ரிபால தலைமையிலான அரசு, கடந்த 2015ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடவடிக்கை எடுத்திருந்தால், சிறையில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் விடுதலையாகி இருப்பார்கள். ஆனால், சட்டச் சிக்கல்களால் அவர்களின் விடுதலை தாமதமாகிறது. எனினும், அடுத்த 2 மாதங்களில் சிலர் விடுதலையாவார்கள் ‘ என்றார்.

இதற்கு முன்பு, ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தொண்டர்களுக்கு “பொதுமன்னிப்பு’ வழங்கி சிறையில் இருந்து விடுதலை செய்தது போல, தங்களையும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று சிறைக் கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்நிலையில், கைதானவர்களை ஓராண்டு காலம் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அமைச்சர் மனோ கணேசன் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனில் அவர்கள், விடுதலைப் புலிகளாகச் செயல்பட்டதாக முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். எனினும், இந்த நிபந்தனைகளை ஏற்று 99 பேர் கடிதம் அளித்திருக்கிறார்கள். ஆனால், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

– Dina Mani

TAGS: