ஒவ்வொரு நாட்டினதும் கடல் எல்லை தொடர்பான சர்வதேச சட்டங்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாதவரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதே உண்மை.
இந்திய மீனவர் ஊடுருவலைப் பொறுத்தவரை இலங்கையின் தற்போதைய அரசு கடைப்பிடிக்கும் உறுதியான கொள்கை திருப்தி தருகிறது.
இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென்பதில் எமது மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.
கடல் வலயம் தொடர்பான சட்டதிட்டங்களை இலங்கை உரியபடி பேணுமென்பதனால், இலங்கைக் கடல் எல்லைக்குள் கைப்பற்றப்படுகின்ற இந்திய மீனவரின் படகுகளை விடுவிக்க முடியாதென்பதும் மஹிந்த அமரவீரவின் கண்டிப்பான நிலைப்பாடாக இருக்கிறது.
இவ்வாறான நிலைமையில் இந்திய மீனவர் விவகாரமானது இப்போது புதியதொரு பரிமாணத்துக்குச் சென்றிருக்கிறது.
இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி வந்து இலங்கைக் கடல் பிரதேசத்தினுள் மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் தங்களது செயலை நியாயப்படுத்தி வந்தார்கள். அவர்களது நியாயங்களை இலங்கை அரசாங்கம் ஒருபோதுமே செவிமடுக்கவில்லை.
தமிழக மீனவர்களின் கோரிக்கையை இந்திய மத்திய அரசும் நியாயப்படுத்தியதில்லை. தமிழக அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அரசியல் சுயநலத்துக்காக தமிழக மீனவரின் ஊடுருவலை நியாயப்படுத்தி வாதிட்டு வந்தனர்.
தமிழக மீனவர்கள் மீதான கடும் நடவடிக்கையை இலங்கைக் கடற்படையினர் சற்றும் குறைத்துக் கொள்ளாத காரணத்தினால், கச்சதீவுக்கு உரிமை கோரும் கோஷம் அங்கு புத்துயிர் பெறத் தொடங்கியது.
கச்சதீவை இந்தியாவுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம், இலங்கைக் கடற்பரப்புக்குள் தாராளமாகப் பிரவேசித்து கடல் வளத்தை அள்ளிச் செல்லலாம் என்பதே தமிழக மீனவர்களின் எண்ணமாகும்.
கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாகவே அறிவித்து விட்டது.
இருநாட்டு நட்புறவின் அடிப்படையில் அன்றைய காலத்தில் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை மீளப் பெறுவதென்ற பேச்சுக்கு இடமில்லையென இந்திய மத்திய அரசு அறிவித்திருப்பதையடுத்து, தமிழக மீனவர்கள் தற்போது மாற்று வழிகளை நாடுவதற்குத் தலைப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் வாரத்தின் சில நாட்களில் மாத்திரம் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்துச் செல்வதற்கான இணக்கப்பாட்டை இலங்கை – இந்திய அரசுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது இக்கோரிக்கை தற்போது டில்லியை எட்டியிருக்கிறது.
இவ்வாறான இணக்கப்பாட்டை இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர் மஹிந்த அமரவீரவை புதுடில்லிக்கு வரவழைத்து மேற்படி இணக்கப்பாடு தொடர்பாக அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதென்ற முடிவு தற்போது எட்டப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை தமிழக மீனவர்களின் இவ்வாறான கோரிக்கையில் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டிய கடப்பாடு இந்திய மத்திய அரசுக்கு இருக்கிறது.
தமிழக மீனவர்களின் இன்றைய நகர்வுகளுக்கு இந்திய மத்திய அரசு செவிசாய்ப்பதற்குக் காரணமே இதுதான்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இலங்கை அரசாங்கத்தினதோ அல்லது வடபகுதி மீனவர்களதோ நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் ஏற்படுவதற்கான அறிகுறியைக் காண முடியவில்லை.
எமது நாட்டுக் கடல் எல்லைக்குள் அயல்நாட்டு மீனவர்கள் ஊடுருவி வந்து மீன்பிடிப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? எமது நாட்டுக் கடல் வளத்தை இன்னொரு நாட்டுக்குத் தாரைவார்ப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? வடபகுதி மீனவர்கள் தங்களது முடிவை மீன்பிடித்துறை அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது அழுத்தம் திருத்தமாகவே கூறி விட்டார்கள்.
அவ்வாறிருக்கையில் எமது வடபகுதி மீனவப் பிரதிகள் தமிழ்நாட்டுக்குச் சென்று தமிழக மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இனிமேல் என்னதான் அர்த்தமிருக்கப் போகிறது!
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பரப்புக்குள் வந்து மீன்களை மட்டும் பிடித்துச் செல்வதில்லை. எமது கடல் வளத்தையே நாசமாக்கிச் செல்கின்றனர். அவர்கள் பயன்படுத்துகின்ற மீன்பிடிப் படகுகள், வலைகள் போன்றவையெல்லாம் எமது கடல் வளத்தை முற்றாகவே அழிக்கக் கூடியவை.
சுருங்கக் கூறவதானால் இலங்கையின் வடபகுதிக் கடலில் எதிர்காலத்தில் மீன்வளத்தையே காண முடியாமல் போகும் நிலைமை உருவாகலாம்.
தமிழக மீனவர்களின் நடவடிக்கையினால் இலங்கைக்கு ஏற்படுவது பொருளாதார இழப்பு மாத்திரமல்ல… கடல் வாழ் உயிரினப் பல்வகைமைக்கே ஆபத்து சூழ்ந்திருக்கிறது!
-http://www.tamilwin.com