தமிழர்கள் தனிநாடு கோர இதுவே காரணம் என்கிறார் சந்திரிகா!

ஏனைய மாகாணங்களுக்கு கிடைக்கும் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக ஏற்பட்ட கோபம், விரக்தி உள்ளிட்டவைகளால் தமிழ் மக்கள் தனிநாட்டைகோரி போராடியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு உதவிகளை செய்வதற்காகவே நாம் வருகின்றோம். உங்கள் அதிகாரங்களை பறிப்பதற்காக வரவில்லை.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கிடையில் உள்ள முரண் நிலையை சரிசெய்வதன் ஊடாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் தேவை அடிப்படையில் மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அவற்றின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை அமைச்சரவை எடுக்கும்போது, அதனை வழிப்படுத்தி நாங்கள் முதன்மை அடிப்படையில் சில வேலைத் திட்டங்களை செய்ய வழிவகுப்போம்.

கிராமங்கள், நகரங்களில் வாழ்கின்ற மக்களை சந்திப்பதன் ஊடாக அவர்களுடைய தேவைகளை அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையிலான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கிராமங்கள் தோறும் மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கின்றோம். குறிப்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் ஊடாக தொழில் வாய்ப்பு மட்டுமல்லாமல், குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற வசதிகள் கிடைக்கும் என்பதுடன், தொழில்வாய்ப்புக்கள் உண்டாக்கப்படும்போது, வீதி உள்ளிட்ட அடிப்படைவசதிகளும் மேற்கொள்ளப்படும்.

இது வடக்கு மற்றும் கிழக்கின் சகல கிராமங்களுக்கும் மேற்கொள்ளப்படும். இலங்கை அரசாங்கம் சகல இனங்களுக்கும் சம உரிமை வழங்கும் நோக்கில் அரசியலமைப்பை திருத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதேபோல் போர் காலத்தில் கைப்பற்றப்பட்ட மக்களுடைய காணிகள் மீளவும் மக்களிடமே வழங்கவும், வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே கடந்த 30 வருடங்களாக போர் நடைபெற்ற நாட்டில் நல்லிணக்கம் என்பது மிக அவசியம். அந்த நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையிலான அரசாங்கமே இப்போது ஆட்சியில் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: