இத்தாலி நாட்டில் வசித்து வரும் 20 முன்னாள் பாலியல் தொழிலாளிகளை கத்தோலிக்க மதக்குரு போப் பிரான்சிஸ் சந்தித்து உரையாடியுள்ளார்.
வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படும் பெண்களில் பலர் பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு நைஜீரியா, ரோமானியா, அல்பேனியா, இத்தாலி, துனிசியா, உக்ரைன் ஆகிய நாடுகளை சேர்ந்த 20 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு தற்போது அத்தொழிலில் இருந்து விலகியுள்ளனர்.
தற்போது இந்த 20 பெண்களும் இத்தாலி தலைநகரான ரோமில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கத்தோலிக்க மதக்குருவான போப் பிரான்சிஸ் இந்த 20 பெண்களையும் இன்று நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இப்பெண்கள் அனைவரும் சுமார் 30 முதல் 35 வயதுடையவர்கள் ஆவர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த உரையாடலில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்கள் போப் பிரான்சிஸ் உடன் பகிர்ந்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு சட்டவிரோதமாக நபர்களை கடத்துவது மனித உரிமைகளுக்கு எதிரான என்றும், தற்போது பாலியல் தொழிலில் இருந்து விலகியுள்ள 20 பெண்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என போப் பிரான்சிஸ் உறுதியளித்துள்ளார்.
-http://news.lankasri.com