உரிமையை வழங்க மறுத்ததன் விளைவாக இந்நாடு இழந்தவைகள் அளப்பரியவை!

siriஇந்து சமுத்திரத்தில் சிறந்த காலநிலையை மாத்திரமல்லாமல் பெறுமதி மிகு வளங்களைக் கொண்ட நாடாக விளங்குகின்றது இலங்கை.அத்தோடு பல்லின மக்கள் வாழும் ஒரு தேசமும் கூட இது.

பிரித்தானியாவின் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்நாடு சுதந்திரம் பெற்று இற்றைக்கு 68 வருடங்கள் கடந்தும் கூட இன்னும் இந்நாடு பொருளாதார ரீதியில் வளர்முக நாடாகவே உள்ளது.

இதற்கு இந்நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினையும் ஒரு காரணம்.

சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து ஆட்சியாளர்களும் ஆட்சியமைப்பதை இலக்காகக் கொண்டு இனவாதத்தை அரசியலாக முன்னெடுத்தனர்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த தவறான வேலைத் திட்டங்களின் விளைவாகத் தேசியப்பிரச்சினை தோற்றம் பெற்றது.

குறிப்பாக 1956ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தின் போது தமிழர்கள் மொழி உரிமையைக் கோரினார்கள்.

அது அதிகாரப் பரவலாக்கல் கோரிக்கையாக இருக்கவில்லை. இருந்தும் அதனை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இங்கிருந்து தொடக்கி வைக்கப்பட்ட உரிமை மறுப்புகள் ஒவ்வொரு அரசாங்கத்தின் காலத்திலும் வளர்ச்சி பெற்று இப்போது தேசியப் பிரச்சினையாக விளங்குகின்றன.

அன்று மொழி உரிமை வழங்கப்பட்டிருந்தால் இந்த தேசியப் பிரச்சினையோ அதிகாரப் பரவலாக்கல் கோரிக்கையோ தோற்றம் பெற்றும் இருக்காது.

முப்பது வருடங்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.

மொழி உரிமையை வழங்க மறுத்ததன் விளைவாக இந்நாடு இழந்தவைகள் அளப்பரியவை.

விலைமதிக்க முடியாத உயிர்களும், கோடிக்கணக்கான பெறுமதி மிக்க சொத்துக்களும் அவற்றில் அடங்கும்.

அத்தோடு விதைக்கப்பட்ட கசப்புணர்வுகளும், வேதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

இவ்வாறு இந்நாட்டுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ள இத்தேசியப் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கடந்த காலங்களில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டு இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்துள்ளன.

இந்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தான் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்தன.

இக்கட்சிகள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தம் பதவிக் காலங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணவென நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

ஆனால் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்தை எதிர்க்கட்சி எதிர்ப்பதே கொள்கையாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் விளைவாக இப்பிரச்சினைக்கு இற்றை வரையும் தீர்வு காணப்படாதுள்ளது.

அதேநேரம் இப்பிரச்சினை நீடிக்கும் வரையும் இந்நாடு பொருளாதார ரீதியிலான சுபீட்சத்தையும் அபிவிருத்தியையும் அடையவும் முடியாது.

இந்த நிலைமையை உண்மையாகவே புரிந்து கொண்டுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்து வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

அவற்றில் தேசியப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காணும் நடவடிக்கைகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

அதனால் தான் பாராளுமன்ற சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல, ‘ இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தை அடுத்த பரம்பரையினருக்கு விட்டு வைக்க மாட்டோம்’ என்று நேற்று முன்தினம் தெரிவித்திருக்கின்றார்.

அதேநேரம் ‘இந்நாட்டில் அதிகாரப் பரவலாக்கல் கோரிக்கையைத் தொடக்கி வைத்தவர்கள் சிங்களவர்களேயன்றி தமிழர்கள் அல்லர்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அது தான் உண்மை.

இந்நாட்டுக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அதிகார திட்டத்தின் அவசியத்தை முதலில் முன்வைத்து வலியுறுத்தியவர் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ். டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்காவே ஆவார்.

அவர் இத்திட்டத்தை 1928ல் முன்வைத்தார். ஆனால் இச்சமஷ்டித் திட்டத்திற்கு அன்று முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தமிழர்களாவர்.

அதேபோன்று 1946ம் ஆண்டில் சோல்பரி அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்ட போது தமக்கு அதிகாரப் பரவலாக்கல் தேவை என கண்டிச் சிங்கள மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

ஆனால் தமிழ் மக்கள் தமக்கு அதிகாரப் பரவலாக்கல் தேவையில்லை. நாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழத் தயார்’ என்று அன்று அறிவித்தனர். இது தான் வரலாறு.

ஆனால் 1956ல் மொழி உரிமையை வழங்க மறுத்ததோடு தொடங்கிய புறக்கணிப்புக்கள் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் முன்னெடுத்த தவறான அணுகுமுறைகளால் தொடர்ந்தும் விரிவடைந்து தேசிய பிரச்சினையாக வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆகவே இப்பிரச்சினை இனியும் தொடர இடமளிக்கலாகாது.

இப்பிரச்சினை நியாயபூர்வமாகத் தீர்த்து வைக்கப்பட்டு எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போன்று ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இதுவே​ நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்போதுதான் நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

-http://www.tamilwin.com

TAGS: