அங்காரா: துருக்கியில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். 94 பேர் படுகாயமடைந்துள்ளனர். துருக்கியின் காஜியாண்டப் நகர் போர் நடைபெற்று வரும் சிரிய நாட்டில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த இடத்தில் திருமண நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று வெடிகுண்டு வெடித்தது. இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் சிதறி சாலையின் பல்வேறு பக்கங்களில் ஓட்டம் எடுத்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேலி பலியானார்கள். 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் குர்தீஷ் படையினருக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன. இதுபோன்று வெடிகுண்டு தாக்குதல் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து துருக்கியின் துணை பிரதமர் மேக்மெட் சிம்சிக் இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்றும் இதனை நாங்கள் கடந்து வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதல் நிச்சயமாக ஐஎஸ் வேலையாகத்தான் இருக்கும் என்று துருக்கி அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை துருக்கியில் நடந்த தாக்குதல்கள்:
ஆகஸ்டு 18: தென் கிழக்கு துருக்கியில் வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் பலி.
ஆகஸ்டு 10: தென் கிழக்கு துருக்கியில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஜுலை 30: 35 குர்திஷ் அமைப்பினர் துருக்கி ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
ஜுன் 29: இஸ்தான்புல்லில் உள்ள அட்டுர்க் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி.
ஜுன் 7: பேருந்து ஒன்றில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழப்பு.
மார்ச் 19: மத்திய இஸ்தான்புல்லில் சந்தை ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 பேர் பலி
மார்ச் 13: அங்காராவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 17: அங்காராவில் ராணுவ வாகனத்தை தாக்க நடந்த முயற்சியில் 28 பேர் பொதுமக்கள் பலி.
ஜனவரி 12: ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உட்பட 10 பேர் இஸ்தான்புல் தாக்குதலில் பலி.