கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
ஒன்று அமெரிக்க தூதுவர் அத்துல் கெசாப் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியமை. இரண்டாவது அமெரிக்க விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானத்தில் வந்த அமெரிக்கப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ஐந்து நாள் மருத்துவ முகாம் மற்றும் உதவிப் பணிகள்.
தற்போதைய நிலையில் அமெரிக்காவின் இந்த இரண்டு நகர்வுகளையும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் தனது பரப்புக்குள் உள்ள நாடுகளில் ஆண்டு தோறும் நான்கு பெரியளவிலான மனிதாபிமான மருத்துவ உதவிப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
ஒப்பரேசன் பசுபிக் ஏஞசல் என்ற பெயரில் இந்த உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதன்முறையாக 2010ம் ஆண்டு இலங்கையில் அமெரிக்கப்படையினர் இந்த மனிதாபிமான உதவிப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
பாரிய விமானத்தில் மருந்துகள், கருவிகளை எடுத்து வந்து கண், பல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனைகளையும் மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவதும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைப்பதும் இவர்களின் பணிகளாக உள்ளன.
வெளிப்பார்வைக்கு இது ஒரு மனிதாபிமான மருத்துவப் பணியாக இருந்தாலும் அதற்குப் பின்னால் இராணுவ, அரசியல் நோக்கங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.
போர் முடிவுக்கு வந்த அடுத்த ஆண்டு(2010) முதன்முறையாக ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் மனிதாபிமான உதவிப் பணிகள் போரால் பாதிக்கப்பட்ட வடக்கிலோ கிழக்கிலோ மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
அப்போது அது அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தான் மேற்கொள்ளப்பட்டன.
அதற்குப் பின்னர் 2013ம் ஆண்டு இரண்டாவது தடவையாக ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இப்போது மீண்டும் யாழ்ப்பாணத்திலேயே இந்த உதவிப் பணிகளை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து இரண்டாவது தடவையாகவும் மருத்துவ உதவிகளுக்கு யாழ்ப்பாணத்தை அமெரிக்கா தெரிவு செய்தது ஏன் என்ற கேள்விகள் இருக்கின்றன.
அதற்கு அமெரிக்க தரப்பில் வடக்கிலேயே போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற காரணமும் கூறப்படலாம்.
அவ்வாறாயின் 2010ம் ஆண்டு போரின் பாதிப்புகளை மக்கள் அதிகம் எதிர்கொண்டிருந்த போது அமெரிக்கா ஏன் வடக்கில் மருத்துவ முகாம்களை நடத்தாமல் அநுராதபுரத்திலும் புத்தளத்திலும் நடத்தியது? என்ற கேள்விக்கு மகிந்த அரசாங்கத்தின் மீது பழி போடப்படலாம்.
எவ்வாறாயினும் இப்போது வடக்கிலுள்ள மக்களுடன் குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்பது கூட இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
2011ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கின் மீது அமெரிக்கா அதிக கரிசனைகளை வெளிப்படுத்தி வந்தாலும் அப்போதைய கரிசனைக்கும் இப்போதைய கரிசனைக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அகற்றுவதற்கு மனித உரிமைகளை தனது கருவியாக தெரிவு செய்து கொண்ட அமெரிக்காவுக்கு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரும் சாக்கில் தான் வடக்கில் அப்போது அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்திருந்தன.
ஆனால் இப்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இல்லை. எனவே மனித உரிமைகள் என்ற கருவியைப் பயன்படுத்தி தற்போதைய அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை.
தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்று கூறக்கூடிய நிலைக்கு சென்றிருக்கும் போது அதனைப் பாதுகாப்பதே அமெரிக்காவின் இப்போதைய கரிசனையாக மாறியிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவிடம் இருந்து எதனையெல்லாம் அமெரிக்கா எதிர்பார்த்ததோ அதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்போதுள்ள சூழல் குழப்பப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை.
இலங்கையின் நிலையான அமைதிச் சூழலை உறுதிப்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கிறது அமெரிக்கா.
இந்தச் சூழல் குழப்பப்பட்டால் தனது மூலோபாய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அமெரிக்காவின் அச்சம்.
மனித உரிமைகள் விவகாரத்தை வைத்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆட்டிப் படைத்த அமெரிக்கா போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் தமிழர்கள் மத்தியில் வலுவாக ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் அணுகுமுறைகள் எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கி விட்ட நிலையில் அமெரிக்கா மீதான நம்பிக்கையும் தமிழ் மக்களிடம் உடையத் தொடங்கி விட்டது.
அமெரிக்கா தம்மை ஏமாற்றி விட்டதாக தமிழ் மக்கள் உறுதியாக நம்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேச விசாரணையில் உறுதியாக இருந்த தமிழர் தரப்பை கலப்பு விசாரணையாக இறங்கி இப்போது உள்நாட்டு விசாரணையாக சுருக்கப்பட்டு அதுவும் கூட ஏனோ தானோ என்று தான் நடக்கும் என்பது போன்ற சூழலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா.
தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த ஏமாற்றத்தை அதிருப்தியை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என்று கூற முடியாது.
ஏனென்றால் ஒரு நகர்வை முன்னெடுக்கும் போது அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று முன்னரே கணிக்கப்பட்டிருக்கும்.
இருந்தாலும் தமிழர் தரப்பு பொறுப்புக்கூறலை விட அமெரிக்காவுக்கு முதல் தேவையானது இலங்கையுடனான நெருக்கமான உறவு தான்.
இதனால் தமிழர் தரப்பின் அவநம்பிக்கையை அமெரிக்கா சம்பாதித்திருக்கிறது.
அந்த அவநம்பிக்கையை போக்குவதும் தமிழர்களுக்கு உதவ தயாராக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவுமே கடந்த வார இருமுனை நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தென்படுகிறது.
ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு திருப்பி விடப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இருக்காது.
வடக்கிலுள்ள மக்களைத் திருப்திப்படுத்துவது இதில் முக்கியமான விடயம்.
நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா எந்த உதவிகளையும் வழங்கத் தயாரென்று அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமென்று அவரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையும் கோரியிருக்கின்றன.
ஆனாலும் அவ்வாறான வாக்குறுதி எதையும் கொடுக்க்கூடிய நிலையில் அமெரிக்கத் தூதுவர் இருக்கவில்லை என விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
இலங்கையில் தூதுவராகப் பணியேற்ற பின்னர் ஏழாவது தடவையாக அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் அத்துல் கெசாப் வழமைக்கு மாறான சந்திப்புகளையே இம்முறை நடத்தினார்.
இதற்கு முன்னைய அமெரிக்க இராஜதந்திரிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நிரலுக்கும் இம்முறை நடந்த சந்திப்பு நிகழ்ச்சி நிரலுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பொதுவாக கொழும்பில் தான் சந்திப்பார் அமெரிக்கத் தூதுவர்.
ஆனால் இப்போது யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கிறது சந்திப்பு. வடக்கு மாகாண சபைக்கும் சென்றிருக்கிறார்.
இவற்றின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையான நிலை ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா முனைவதாகத் தெரிகிறது.
அதாவது கூட்டமைப்புடன் இணைந்து அமெரிக்கா செயற்படுகிறது என்பதைக் காட்ட முனைந்திருக்கிறது.
தமிழ் மக்களுக்கும் தமக்கும் இடையில் இடைவெளி ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்த முனைந்திருக்கிறது.
எனினும் அமெரிக்காவின் இந்த முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று கூறமுடியாது..
காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்கும் சட்டத்தை நிறைவேற்றியதை பெரிய சாதனையாக அமெரிக்கா கொண்டாடுகிறது.
ஆனால் இதையிட்டு தமிழ் மக்கள் திருப்தி கொள்ளவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் உருவாக்கப் போகும் பொறிமுறை மீதும் நம்பிக்கையற்றவர்களாகவே தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
அரசாங்கத்தின் இத்தகைய பொறிமுறைகளுக்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்காது போனால் குழப்பம் உருவாகும்.
இதனால் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தம் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாத் தரப்பிடமும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தமிழ் மக்கள் போராட்டத்தில் இறங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை.ஏனென்றால் அது தனது நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறது.
நல்லிணக்க முயற்சிகள் சரியாக முன்னெடுக்கப்படாது போனால் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக முன்னர் மகிந்த ராஜபக்சவுக்கு எச்சரித்திருந்தது அமெரிக்கா.
தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலராக இருந்து ரொபேர்ட் ஓ பிளேக் இதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
இதுபோன்ற நிலையைத் தவிர்க்கவே வடக்கின் மீது அமெரிக்காவின் கரிசனை திரும்பியிருக்கிறது.
அமெரிக்காவின் இந்தக் கரிசனை தமிழர்களின் நலன்களைச் சார்ந்ததாக ஒருபோதும் இருக்காது.
அது அமெரிக்காவின் பூகோள அரசியல் மற்றும் இராணுவ நலன்களையே அடிப்படையாகக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
-http://www.tamilwin.com