சர்வதேச நீதி வேண்டி கிளிநொச்சியில் திரண்டது மக்கள் பேரலை!

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒன்றிணைந்த 200க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகமாகிய அறிவகத்தில் கையளித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினை கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் அமைக்குமாறும் அவ்வாறன காணாமல் ஆக்கப்பட்டோர் செயலகத்தில் முடிவெடுக்கும் நிலையிலான சர்வதேச பங்காளிகளின் பங்கு பற்றல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் மெய்ப்பித்துகாட்டுகின்ற அதிகாரம் இக்குழுவிற்கு இருக்கவேண்டும் என்றும், இக்குழுவானது பாதிக்கப்பட்டவர்களின் விருப்ப கருத்துக்களுக்கு அமைய உருவாக்கப்படுவதுடன் தமிழ் புத்திஜீவிகளும், சட்டத்தரணிகளும் இக்குழுவில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

அத்துடன் இக்குழுவின் முடிவுகள் குற்றவியல் பொறுப்பை ஏற்படுத்த கூடியவையாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாகவும் அச்சுறுத்தல் இன்றியும் செயற்பட கூடிய அலுவலகமாக காணாமல் ஆக்கப்பட்டோர் செயலகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இச்செயலகம் அமைந்தாலே இக்குழு மீது நாம் ஓரளவு நம்பிக்கை கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படிவிடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஊடாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியோடு பேசி இவ்விடயங்களை நிறைவேற்றுமாறு கோரிய மனு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யோ. கனகரஞ்சினியினால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் கையளிப்பதற்காக கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் அ.வேழமாலிகிதனிடம் அறிவகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

-http://www.tamilwin.com

TAGS: