துருக்கியில் திருமண நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெரும்பாலும் சிறுவர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றின்போது 14 வயது சிறுவனை வைத்து ஐ.எஸ் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
இச்சம்பவம் துருக்கி நாட்டையே உலுக்கியுள்ளது. குர்துகளின் திருமண நிகழ்ச்சி ஒன்று துருக்கியின் தென் பகுதியில் அமைந்துள்ள நகர் ஒன்றில் கோலாகலமாக நடந்து வந்துள்ளது.
அப்போது 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை தற்கொலை வெடிகுண்டாக அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, தொலைவில் இருந்தபடியே ரிமோட் பயன்படுத்தி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளது.
இதில் 54 பேர் சம்பவயிடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். இந்த நிலையில் பலியானவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த திருமண விழாவின்போது பலியானவர்களில் 22 பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இது தீவிரவாதிகளின் கொடுஞ்செயலை படம்பிடித்து காட்டுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து குழந்தைகளில் நான்கினை பறிகொடுத்த தந்தை ஒருவர், படுகாயமடைந்துள்ள எஞ்சிய குழந்தையும் பிழைத்துக்கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கதறியது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.
-http://news.lankasri.com