சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபரும் அந்த தேசத்தின் 2-வது தந்தை எனவும் போற்றப்படும் மறைந்த தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் இளமையில் வறுமையாலும் பின்னாளில் அரசுப் பொறுப்பில் இருந்த காலத்தில் மக்களுக்காக தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாகவும் இருந்த வரலாறு இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
-1924ம் ஆண்டு செல்லப்பன் அபிராமி தம்பதிக்கு பிறந்தவர் எஸ்.ஆர். நாதன்.
-வறுமையால் நாதனின் தந்தை மலேசியா ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை பார்த்தவர் ஆனால் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் எஸ்.ஆர். நாதனின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் தற்கொலைக்குப் பின்னர் நாதனின் குடும்பம் மீண்டும் சிங்கப்பூருக்கே திரும்பியது.
-வறுமையுடன் போராடி உயர்கல்வியை நிறைவு செய்தார் எஸ்.ஆர். நாதன் 1955ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அரசில் பல்வேறு துறைகளில் பணி புரிந்தார்.
-1974ம் ஆண்டு சிங்கப்பூர் பாதுகாப்பு, புலனாய்வுத்துறை தலைவராக எஸ்.ஆர்.நாதன் பணிபுரிந்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் இருந்த எண்ணெய் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி, பாலஸ்தீன விடுதலை முன்னணியினர் தாக்குதல் நடத்தினர்.
-சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது எண்ணெய் கிடங்கில் இருந்த பணியாளர்கள் பிணைக் கைதிகளாக சிக்கினர். பிணைக் கைதிகளுடன் தீவிரவாதிகள் மத்திய தரைக்கடல் நோக்கி புறப்பட சிங்கப்பூர் கடற்படை மடக்கியது. ஆனால் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் தாங்கள் குவைத்துக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது தீவிரவாதிகளின் நிபந்தனை.
-தீவிரவாதிகளின் நிபந்தனைப் படி நான் பிணைக் கைதியாக வருகிறேன்; மக்களை விடுவிக்குமாறு நாதன் வேண்டுகோள் வைத்தார். இதன்படி தீவிரவாதிகளுடன் 13 நாள் பிணைக் கைதியாக இருந்து பின்னர் நாடு திரும்பினார் நாதன்.
-சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு நெருக்கமானவராகவும் இருந்ததால் 2-வது தந்தையாக போற்றப்பட்டவர் அதிபர் நாதன். மறைந்த எஸ்.ஆர். நாதனின் உடலுக்கு நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர்!
–tamil.oneindia.com
தமிழருக்கு பெருமை சேர்த்த மாபெரும் மனிதர் !! தரணியில் தமிழன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் .
மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்த திரு நாதன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
ஆழ்ந்த அனுதாபம்…