விஷ ஊசி விவகாரம் முற்றிலும் பொய்யானது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளமை தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம் பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டபோது இலங்கை இராணுவத்தினரால் விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. இது போலியான ஒரு குற்றச்சாட்டு என இராணுவ தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர, மேல்மாகாண பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ரணசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் குறித்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
-http://www.tamilwin.com

























