இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போது அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் இலங்கையில் 16084 பேர் காணாமல் போயுள்ளனர்.
எனினும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது விசாரணைகளின் பின்னர் இந்த எண்ணிக்கை பதினாறாயிரம் என்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
காணாமல் போனவர்களுடைய தாய்மார்களுக்கு நியாயத்தைப்பெற்றுக் கொடுப்பதற்காக நரகத்துக்கும் செல்லத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும் நாங்கள் நரகத்துக்கோ, ஜெனீவாவுக்கோ செல்லாமல் அந்தத் தாய்மாரின் கண்ணீருக்கு பதிலொன்றைப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்துள்ளோம். இது பெரும் வெற்றியாகும்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் அத்தாட்சியொன்றை வழங்குவதன் ஊடாக இலங்கையில் இதுவரை காலமும் பல்வேறு குடும்பங்களில் நிலவிய காணிபங்கீடு, திருமண உறவுகள் போன்றவற்றிலான சட்டச்சிக்கல்களை இனி வரும் காலங்களில் இலகுவாகத்தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com