விக்னேஸ்வரனின் ஆதரவு இல்லாமல் நன்மையில்லை…! தமிழ்த் தலைமைகளும் மறந்தனவோ?

vikkineswaranமுதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது அரசாங்கம் அதிருப்தி கொண்டிருக்கின்றது. அவர் மீது ஏன் இவ்வளவுக்கு அரசாங்கமும், வடக்கு ஆளுநரும் கொதிப்பில் இருக்கின்றார்கள் என்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே கிடைத்திருக்கின்றது.

அரசாங்கம் வடக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதரவு கொடுப்பதில்லை. அல்லது அதில் கலந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பது தான்.

உண்மையில் வட மாகாணத்து மக்களுக்கு எவ்வாறான அபிவிருத்திப் பணிகளால் பயன்களை பெறமுடியும் என்பது தொடர்பில் வடக்கு மாகாண சபையும், மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்து மாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை உறுப்பினர்களுமே முடிவெடுக்க வேண்டும்.

என்னதான் மாகாண சபைக்கு அதிகாரங்கள் குறைவாக இருப்பினும், அந்த மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியானது மக்களுக்குப் பொருத்தமானதுதானா? அது நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி தானா என்று சிந்தித்தாக வேண்டும்.

இந்நிலையில் தான் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தன்னுடைய எதிர்ப்பினை வெளியிட்டு வருவதோடு அதில் ஒதுங்கியும் நிக்கிறார்.

இதில் தவறேதும் இருப்பதாக தோன்றவில்லை. ஜனநாயக தேர்தலின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரின் முடிவு அந்த மக்களின் நல்வாழ்விற்கானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிற்க, அரசாங்கம் வடக்கு முதல்வர் தங்களின் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு ஆதரவு தருவதில்லை என்பது வேடிக்கையானது தான். ஆனால், தங்களின் திணிப்பை, தாங்கள் விரும்புவதை வடக்கு முதல்வர் ஏற்கவேண்டும்.

நாங்கள் காட்டும் பாதையில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும் என அரசாங்கம் சொல்லுமாயின் அதற்கு தலையாட்ட வேண்டிய அவசியம் வடக்கு முதல்வருக்கும், மாகாண சபைக்கும் கிடையாது.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க “அரசு எதைச் செய்தாலும் வடக்கு மாகாண முதல்வர் அதை விரும்புவதில்லை” என்று கூறியிருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க. வடக்கு மாகாண முதல்வர் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.

குறிப்பாக மத்திய அரசு ஏதாவது ஒன்றைச் செய்ய முயற்சித்தால் அதை வடக்கு மாகாண முதலமைச்சர் விரும்புவதில்லை.

அண்மையில், வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை. மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை அரசு செய்யும் என்று கூறியிருக்கின்றார்.

உண்மையில் நடந்தது என்ன? வடக்கு மாகாண ஆளுநர் தன்னுடைய விருப்பிற்கு ஏற்றால் போல் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

வடக்கு மாகாணத்தில் மக்கள் தங்களுக்கென்று ஒரு தலைவரை ஜனநாயகத்தின் அடிப்படையில் தெரிவு செய்திருக்கின்றார்கள். இந்நிலையில் அவரின் கருத்துக்களுக்கு அரசாங்கம் செவிசாய்த்திருக்க வேண்டும்.

வடக்கில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது என்பது இங்கே முக்கியமல்ல. ஆனால் அம்முதலீடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டதன் பின்னரே இந்த மாநாட்டினை அரசாங்கம் கூட்டியிருக்க வேண்டும்.

இலங்கையின் ஏனைய மாகாணங்களைப் போன்றதல்ல வடமாகாணம். அதன் தரைத்தோற்றத்தில் இருந்து, ஏனைய பௌதீக வளங்கள், என்பவற்றை எவ்வாறு பயன்படுத்தி மாகாணத்தை அபிவிருத்தி செய்வதென்பது தொடர்பான ஆய்வுகள் இன்றியமையாததாக இருக்கும் நிலையில், அபிவிருத்திக்கு மாகாண முதலமைச்சர் ஒத்துழைப்பு தருவதில்லை என்று வெளிக்காட்டுவது, முதலமைச்சர் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் ஆர்வம் இல்லாதவர் என்று காட்டவே அரசாங்கம் எத்தணிக்கின்றது.

ஆனால், இவ்வாறான பிரச்சினைகள் இருக்க, அரசாங்கம் முதலமைச்சரின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்காது, தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இயங்கக்கூடிய ஆளுநரின் மூலமாக தன்னுடைய செயற்பாடுகளை லாபகமாக செய்துவருகின்றது.

வடக்கில், மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியானது குறுகிய காலத்திற்கானதல்ல. அது நீண்டகாலத்திற்கானதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதனை அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொள்வது கவலைக்குரிய ஒன்று.

இதில் வேடிக்கையான, சம்பவம் ஒன்றும் நடந்தேறிக்கொண்டு இருப்பது தான் முக்கிய கவனத்தைப் பெறுகின்றது.

மாகாணத்தின் முதல் அமைச்சர் புறக்கணிக்கும் நிகழ்வுகள், திட்டங்களில் தமிழ் மக்களால் தெரிவு செய்த தமிழ்த் தலைமைகள் கலந்து கொள்வது தான்.

இதன் மூலமாக அவர்கள் சொல்லவருவது என்னவென்றே புரியவில்லை. வடமாகாண முதலமைச்சரின் மீது இவர்களுக்கு இருக்கும் அதிருப்தியா அல்லது, அரசாங்கத்தின் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிக்கின்றார்களா என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

அரசாங்கம் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர்களும் இருக்க வேண்டும் என்று கனவில் மிதக்கின்றது. இதுவரை காலமும் 8 மாகாணங்களின் முதலமைச்சர்கள் அரசாங்கத்தின் சொல்கேட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

எனினும் இப்பொழுது, கிழக்கு முதலமைச்சர் அரசாங்கத்தினதும், ஆளுநரினதும் அதிகார தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

மாகாண அதிகாரத்தை விடுதலைப் புலிகள் எதிர்த்து நின்றமைக்கான அடிப்படைக்காரணங்களில் ஒன்று தான் இந்த அரசாங்கத்தின் தலையீடு.

இந்நிலையில் அரசாங்கம் தான் நினைத்ததை செய்வதற்கு எதற்காக முதலமைச்சரும்? மாகாண சபையும்?

ஆக, அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செய்யும் வேலைத்திட்டங்கள் வடக்கு மக்களுக்கு நீண்டகாலத்திற்கு நன்மை பயக்கப்போவதில்லை.

இந்துக்கள் எந்தக் காரியத்தை தொடங்கினாலும், விக்னேஸ்வரனை முதலில் வணங்கியே தமது காரியத்தை ஆரம்பிப்பர்.

அது மதம் சார்ந்த நம்பிக்கை என்றாலும், இப்பொழுது வடக்கில் எந்த அபிவிருத்திப் பணியாக இருந்தாலும் சரி, அரசியல் விவகாரங்களாக இருந்தாலும் சரி அரசாங்கம் விக்னேஸ்வரனை அணுகியாகவேண்டும்.

ஏனெனில் அவர் தற்பொழுது, வடக்கு மக்களின் முதல்வர். அதனை அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகளும் மறக்காமல் இருப்பது நல்லது.

செய்யும் காரியம் நல்வினையில் முடிய விக்னங்களைத் தீர்க்கும் விக்னேஸ்வரன் துணை வேண்டும் என்பதை மறவாதீர்….!

-http://www.tamilwin.com

TAGS: