கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற யாழ் குடாநாட்டிலே இன்றைய களநிலவரங்கள் திசைமாறிய சமுதாயத்தின் அடையாளமாக உருவெடுத்துக் கொண்டு இருக்கின்றது.
போருக்குப் பின்னரான வாழ்வியல் என்பது பல சமூக சவால்களைக் கொண்டதாக அமைந்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அந்தச் சவால்களின் முகங்கொடுப்பு என்பது எமது அடுத்த தலைமுறையை நிலைப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர நிலைகுலைய வைப்பதாக இருக்கக் கூடாது.
ஏற்கனவே சில தீயசக்திகளினால் யாழில் பல தடவைகள் திட்டமிட்ட பல அழிப்புக்கள் நடந்தாலும் கூட அவை யாழ் மக்களின் கலாச்சார பின்புலத்தை பெரிதளவு பாதித்து இருக்கவில்லை.
இலங்கையின் மூளை என சொல்லப்படும் யாழ் மக்களின் கல்விச் சமூகத்தைக் குறிவைத்து ஏற்கனவே ஒரு தடவை ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.
யுத்தம் என்ற பெயரில் எமது மூளைசாலிகளை வெளியேறச் செய்தார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றிருப்பினும் கூட எமது பலத்தை யாராலும் குலைக்க முடியவில்லை.
அதற்கான காரணம் ஆரம்பத்திலிருந்தே யாழில் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைக்கு யாழ் மக்கள் பழக்கப்படுத்தப்பட்டிருந்தமையால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பலமானவர்களாகவும் தெளிவானவர்களாகவும் இருந்தமையினால் எத்தனையோ சரிவுகளைத் தாண்டியும் மீண்டும் எழும் வலிமை அவர்களிடம் இருந்தது.
இதற்குரிய முக்கிய காரணம் யாழ் மண்ணிற்கு என தனித்துவமான பண்பாடு கொண்ட கலாச்சார முறை ஒன்று இங்கு பேணப்பட்டது.
யாழ் மக்களை வெற்றி கொள்ள எண்ணிய சில சக்திகள் யாழ் மக்களின் பலத்தினை சரியாக இனம் கண்டு கொண்டு அவர்களின் கலாச்சார பலத்தை நிர்மூலமாக்கினாலே தாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டனர்.
இதனைக் கருத்தில் கொண்டு யாழ் மண்ணின் பலத்தை உடைப்பதற்காக போதைப் பொருளை ஒரு கருவியாக கொண்டு யாழ் மண்ணிற்குள் ஊடுருவி தமது ஆதிக்கத்தை பரவலடைய செய்தனர். கூடுதலாக இந்த போதைப்பொருள் பரிமாற்றமானது தரைவழியாக இல்லாமல் கடல்வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை பொறுத்த வகையில் மாதகல் கடல் வழி மூலமாகவும், வடமராட்சிக் கடல் வழி மூலமாகவும், மன்னார் கடல் வழி மூலமாகவும் பாரியளவு போதைபொருள்கள் கைமாற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகங்களில் நாம் காணும் செய்திகளில் இத்தனை அளவு கஞ்சா மீட்பு சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யப்பட்டார். என்ற தகவல்கள் வெளியாகின்றனவே தவிர யார் அந்த நபர்? இதனைச் செய்கின்ற குழுக்கள் எவை? இவற்றின் மையம் எங்கிருக்கின்றது? இதற்கு யார் தலைமை தாங்குகின்றார்கள்? போன்றவை இன்னமும் வெளிவராமல் அந்த தகவல்கள் காக்கப்படுகின்றன.
மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் சரியான முறையில் பொலிஸாரினால் உரிய இடங்களுக்கு கையளிக்கப்படுகின்றதா, இல்லை அவை மீண்டும் சமூகத்தில் உலா வருகின்றதா என்பதும் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் மீட்கப்படுவது கேரளா கஞ்சாதான் இதன் பெறுமதி 1 கிலோ ஒரு இலட்சம். ஹெரோயினும் யாழில் குறிப்பிட்டளவு உலா வருகின்றது. இதன் பெறுமதி 100 கிராம் ஒரு இலட்சம்.
கடல் வழி மூலமாக கைமாற்றப்பட்ட போதைப் பொருட்கள் பின்னர் பல வழிகளில் விநியோகிக்கப் படுகின்றது. பெரும்பாலும் சொகுசு பஸ்களிலும் முச்சக்கர மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.
அண்மையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் சொகுசு பஸ் ஒன்றில் போதை பொருட்கள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இப் போதைப் பொருள் பாவனையால் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். கடந்த ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் பாடசாலை மாணவர்களுக்கு இடைவேளை நேரங்களில் பாடசாலை வட்டாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களே கைமாற்றிக் கொள்கின்றார்கள் என்பதும் சிந்திக்க வேண்டிய விடயம்தான்.
இதுவரை காலமும் யாழில் வேரூன்றியிருந்த ஒற்றுமை மரியாதை எல்லாம் இந்த போதைப் பொருளின் வருகையினால் சிதைக்கப்பட்டது. ஒரு மனிதன் போதைக்கு அடிமையானால் அவன் மனிதன் என்ற போர்வையில் விலங்கைவிட கீழ்த்தனமாக நடந்து கொள்வான்.
அவன் கொலை கொள்ளை கற்பழிப்பு என அனைத்து தீயசெயல்களையும் மிக எளிதாக செய்து விடுவான். ஏனெனில் தான் என்ன செய்கிறேன் என்ற சுயநினைவே அவனிற்கு இருக்காது. அவனிடம் அன்பு மரியாதை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. சமூகம் பற்றிய அக்கறையோ பயமோ இருக்காது. மொத்தத்தில் ஒரு கொடிய அரக்கன் போல நடந்து கொள்வான்.
இலங்கை வரலாற்றில் கூட இந்த போதையால் ஏற்பட்ட விளைவைக் காணலாம். ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்ற பல தடவை முயற்சி செய்த போதும் கண்டிய மக்கள் மன்னனிடம் கொண்டிருந்த விசுவாசத்தினால் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்த ஆங்கிலேயர் மக்களிடம் இருந்து மன்னனைப் பிரிக்க மன்னருக்கு பரிசுப் பொருட்களுடன் மதுவையும் அளித்து மன்னனை மது போதைக்கு அடிமையாகச் செய்தனர். போதைக்கு அடிமையாகிய மன்னன் கொடூரச் செயல்களைச் செய்ய மக்கள் மன்னனை வெறுத்து ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்து கொள்ள ஆங்கிலேயர் இலகுவாக கண்டியைக் கைப்பற்றினார்கள்.
அன்று இலங்கையில் ஆங்கிலேயர் செய்த சதிச் செயல்களையே இன்று யாழ்மண்ணிற்கும் சில சதிகாரர்கள் செய்கிறார்கள். திட்டமிட்டு யாழ் மக்களை போதைக்கு அடிமையாக்கி யாழ் மண்ணின் கலாச்சார கட்டமைப்பினை சிதைவடையச் செய்தால் தமிழ் மக்களை இலகுவாக வென்றுவிடலாம் என்று நினைக்கின்றார்கள் போல.
வேரோடு மரம் சாயும் முன் சிதைக்கப்பட்டவர்களை சீர்செய்யப்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. இலங்கையின் போதைப்பொருள் மையமாக யாழ்ப்பாணம் மாறிவிட முன்பே அதனைத் தடுத்த நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
யாழிற்குள் நுழையும் போதைப் பொருட்கள் என்ன செய்யப்படுகின்றது? இதனோடு தொடர்புடைய அதிகாரிகள் யார்? இதனை செயற்படுத்தும் குழு எது? என்ற பல வினாக்களுக்கு விடைகாணும் போது யாழில் போதைப் பொருள் என்ற பெயரின் பாதை மாற்றப்படும்.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள அதிகாரிகளின் செயல் வேகம் அதிகரிக்கப்பட்டு அவர்களால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு நபர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் அப்போது தான் எம் யாழ் மண்ணைக் காக்க முடியும்.
“வரும் முன் காப்போம்”
-http://www.tamilwin.com