போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிலையான வேலைத்திட்டம்! அமெரிக்கா யோசனை

nisha_biswal_001இலங்கையின் தற்போதைய அரசியல் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து சிங்கப்பூரில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான இராஜாங்க செயலாளர் நிசா பிஷ்வாலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிஷ்வாலை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆசிய பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் அரசியல் சவால்கள் தொடர்பிலும், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கண்டி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கான நிலையான அபிவிருத்தி திட்டம், மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் குறித்தும் பிரதமர் அவருக்கு விளக்கமளித்துள்ளார்.

யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களின் சகஜ வாழ்க்கை நிலையை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நீண்டகால நிலையான வேலைத்திட்டம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இணக்கப்பாட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லாட்சி வேலைத் திட்டத்திற்கு பிஷ்வால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: