பான் கீ மூனின் வருகையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்

ban-kiஇலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் அனைத்து இடங்களுக்குமான பொது அடையாளத்தை நோக்கிய நகர்வுகள் அத்தியாவசியமாகும்.

அதனை அடைவதற்கு உள்நாட்டு அரசாங்கத்தின் தற்போதைய நகர்வுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடிகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் நல்லிணக்கம், நிலையான சமாதானம் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் சகவாழ்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கரிசனை கொண்டுள்ளமையினாலேயே இரண்டாவது தடவையாக இங்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதன்கிழமை இரவு இலங்கை வந்த பான் கீ மூன், வியாழனன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான சந்திப்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்காக அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். பொறுப்புக்கூறலில் சர்வதேச தரப்பின் பங்களிப்பின் அவசியம், காணாமல் போனோர் பிரச்சினைகள், வடக்கு கிழக்கு மீள் குடியேற்றம், காணி விவகாரம், அரசியல் கைதிகள் பிரச்சினை, அதீத இராணுவப் பிரசன்னம் போன்ற முக்கிய விடயங்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருந்தன. யுத்தம் நிறைவுக்கு வந்தபோது 2009ம் ஆண்டிலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள் கட்டியெழுப்புவது, சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, தமிழ் மக்களின் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காண்பது தொடர்பில் காத்திரமான பங்களிப்பை வழங்குவது உட்பட பல்வேறு உறுதிமொழிகளை முன்னைய அரசு வழங்கியிருந்தது. எனினும் அவை நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளை, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட கையோடு முதற்றடவையாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்துள்ளதுடன் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து உரையாடியுள்ளார். அதுமாத்திரமின்றி, யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் கண்டறிந்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளியன்று ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்துக் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, தான் பான்கீமூனுடன மேற்கொண்ட பேச்சுக்கள் தொடர்பிலும் கருத்துக்களை .முன்வைத்தார்.

புதிய ஆட்சியில் இலங்கை அடைந்துவரும் முன்னேற்றம் குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பான்கீமூன் தெரிவித்தாரென ஜனாதிபதி கூறியதுடன், நாட்டை மேலும் முன்னேற்றகரமான பாதையில் இட்டுச்செல்ல கால அவகாசம் வழங்க வேண்டுமெனத் தாம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பான் கீ மூன், புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அதேவேளை, இலங்கை மீண்டும் எந்தவிதமான அழுத்தத்தையோ குறித்த பிரச்சினைகளுக்கு இந்தக் கால கட்டத்துக்குள் தீர்வு காண வேண்டுமென்ற கால அவகாசத்தையோ விதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அந்தவகையில் பான்கீ மூனுடனான பேச்சுக்கள் மிகவும் இணக்கமான ரீதியில் நீடித்தன என்றும் ஜனாதிபதி கூறினார்.அத்துடன் வடபகுதி விஜயத்தின்போது ஒருசில கடும்போக்காளர்கள் தமிழர் பிரச்சினைகளுக்கு புதிய அரசு உரிய தீர்வை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை யும் முன்வைக்கலாம் எனினும், நிலைமை அவ்வாறில்லை.

நாம் காணிகளை விடுவித்து வருகின்றோம்.மீள் குடியேற்றத்தினை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் படிப்படியாக தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இவை மந்தகதியில் அமைந்தாலும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காத்திரமான வகையில் தீர்வு காணப்படும். என்பதை நான் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் எடுத்துரைத்துள்ளேன் என் றும் தெரிவித்தார்.

இதனிடையே பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தது.

மீள்குடியேற்றம், காணாமல்போனார் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம் என்பனவற்றுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தவேண்டுமென வலியுறுத்தியுமே இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ் மக்களை பொறுத்தமட்டில் தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காது காலத்தை இழுத்தடித்து வருவதனால் மிகுந்த விரக்தியடைந்துள்ளதுடன் சர்வதேச சமூகமாவது தலையிட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.

இருதரப்பு நியாயங்களை செவிமடுக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அது தொடர்பில் ஆக்கபூர்வமான வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதோ அன்றேல் அறிவுரைகளை வழங்குவதோ இல்லையென்பதே தமிழ் மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது.

இலங்கை விவகாரத்தில் கரிசனை காட்டிய பல்வேறு உலக நாடுகளும் தமது மறைமுக நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலேயே அதிக ஆர்வத்தை கொண்டிருந்ததே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எந்தவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்றும், அவை இலங்கையில் தங்கள் கால்களை பதிவு செய்ய தமிழர் விவகாரத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி கொண்டதாகவுமே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் நீண்ட கால புரையோடிப்போன பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை சர்வதேசமும் அரசாங்கமும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

இன்றைய சூழ்நிலையில் தமிழர் தரப்பு தமது புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படவேண்டுமென்ற அழுத்தத்தை அரசாங்கத்துக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கும் அதேவேளை, அரச தரப்போ தமது செயற்பாடுகள் தொடர்பில் ஜக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் வரவேற்பைத் தெரிவிக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக எதிர்பார்ப்பதாகவே தெரிகின்றது.

இந்நிலையில் கள யதார்த்தத்தையுணர்ந்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எவ்வாறு தமது கருத்தை பதிவு செய்யப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.நாட்டில் யுத்தம் மோசமாக இருந்த காலகட்டத்தில் முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை மிகவும் நீதியான வகையில் குரல்கொடுத்து வந்தார்.

அது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அமைந்திருந்தது. எனினும் அவர் ஓய்வு பெற்றதையடுத்து தமிழ் மக்கள் மீதான கரிசனை குறைந்துபோயுள்ளதான தோற்றப்பாடே இன்று காணப்படுகின்றது.சர்வதேச சமூகமாவது அரசாங்கத்துக்கு உரிய அழுத்தத்தை பிரயோகித்து தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நிர்ப்பந்திக்க வேண்டுமென்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் மந்தகதியிலான செயற்பாடுகள் எந்தவகையாலும் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதே யதார்த்தமாகும்.அதேவேளை, அரசுக்கு எதிரான சக்திகளும் கடும்போக்காளர்களும் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் முனைப்பாகவே இருந்து வருகின்றன.

இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில் கடும்போக்காளர்களின் சவால்களை சமாளித்துக் கொண்டு அரசாங்கம் எவ்வாறு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றது என்பதே அடுத்து எழும் கேள்வியாகும்.எவ்வாறெனினும் தமிழ் மக்களும் இந்நாட்டு மக்கள் என்பதை கருத்தில் கொண்டு அரசாங்கம் தனது செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பது அத்தியாவசியமாகும்.

கடந்தகால யுத்தத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், யுத்த காயங்களை மனதில் சுமந்தவாறே தமது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை சர்வதேசமும் அரசாங்கமும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

இதனை அரசியல் தலைமைத்துவங்கள் மாத்திரமின்றி சகல மட்டங்களும் உணர்ந்து செயற்படுவது அவசியமாகும்.

கடந்த முப்பது வருடகால கொடிய யுத்தம் முடிவுக்கு வந்தது என அரசாங்கம் பெருமை பேசிக்கொள்வதற்கு அப்பால், அதற்கான காரணங்களும் நெருக்கடிகளும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அவை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதனையும் அழுத்தி உரைக்க விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: