சட்டம் இயற்றினால் மட்டும் போதாது! அது நடைமுறைத்தப்பட வேண்டும்! விளக்குகிறார் சம்பந்தன்

ban sambanthanகூடுதலான அதிகாரப் பகிர்வு என்ற தமிழர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அதேவேளை, எவ்வளவு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான கலந்துரையாடல் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் விளக்குகிறார்.

இது தொடர்பாக அவர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-

கேள்வி : ஐ. நா. செயலாளர் நாயகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடிய முக்கியமான பிரச்சினைகள் என்ன?

பதில் : நல்லிணக்கம், நல்லிணக்கத்துக்கான தடைகள், காணிப் பிரச்சினைகள், தடுப்புக் காவலில் உள்ளவர்கள் பற்றிக் கலந்துரையாடினோம்.காணாமல் போனவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் காணாமல் போனவர்கள் பற்றி முறைப்பாடு செய்தவர்களின் திருப்திக்காக குறிப்பிட்ட அலுவலகம் முறையாக செயல்படுகிறது என்பதை உறுதிசெய்ய சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்றால் மீள்குடியேற்றம், வீடமைப்பு, வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் இன்னும் நன்றாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.பொறுப்புக்கூறல், இலங்கை கையெழுத்திட்டுள்ள ஐ. நா. தீர்மானம் என்பன நல்லெண்ணத்துடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தொடர்ந்து அரசியல் சாசனத்தின் பிரகாரம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறினோம். இவற்றுக்கெல்லாம் எமக்குச் சாதகமான பதில் கிடைத்தது. இந்த விடயங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறுவதாக அவர் உறுதியளித்தார்.

கேள்வி : காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்படவில்லை. எனவே, அந்த அலுவலகம் அமைப்பதோ, விசாரணைகள் நடத்துவதோ சாத்தியமற்றது என கூட்டு எதிரணி கூறுகிறது. உங்களுடைய கருத்தென்ன?

பதில் : கூட்டு எதிரணியின் நிலைப்பாட்டுடன் எனக்கு உடன்பாடு இல்லை. எனது நிலைப்பாடு என்னவென்றால் சட்டம் இயற்றப்பட்டு விட்டது. அது இப்போது முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டம் இயற்றினால் மட்டும் போதாது.

கேள்வி : நீங்கள் கேட்கிற அதிகாரப் பகிர்வின் சுற்றளவு என்ன?

பதில் : சாத்தியமான கூடுதல் அதிகாரப் பகிர்வு பற்றி எல்லோரும் பேசிவிட்டார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதித்து இருக்கின்றன. அந்த பரந்த அதிகாரங்களைத்தான் நான் கேட்கிறேன்.

கேள்வி : சிறிசேன – விக்ரமசிங்க நாட்டைப் பிரிக்கும் பயணத்தில் இணைந்திருப்பதாக கூட்டு எதிரணி கூறுகிறதே. உங்களுடைய கோரிக்கைகள் மூலம் அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் வலு சேர்க்கிறீர்கள் இல்லையா?

பதில் : அதிகாரங்களைப் பகிர்வது நாட்டைப் பிரிப்பதாகாது. அவர்களுடைய நகைப்புக்கிடமான நிலைப்பாட்டால் நான் எனது கோரிக்கைகளிலிருந்து இறங்கிவர முடியாது. அரசாங்கம் அதைரியப்படவில்லை. பான் கீ மூன் கூட இந்த விடயத்தைக் கூறியிருக்கிறார்.

கேள்வி : தற்போது 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அரச அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இது போதாதா?

பதில் : வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதாது. மறைந்த ஜனாதிபதி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் பதவிக் காலங்களின் போதும் புதிய அதிகாரப் பகிர்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காரணம், நடைமுறையிலுள்ள அதிகாரங்கள் போதாது என்பதனால்தான்.

-http://www.tamilwin.com

TAGS: