கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்ததால், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் இருந்து வந்த இடைவெளி காரணமாக, கொழும்பில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், இருதரப்பு உறவுகளில் பெரியளவில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
1987ம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமராக அவர் இடம்பிடித்தார்.இதற்குப் பின்னர், இந்திய—- – இலங்கை உறவுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அது இந்தியா எதிர்பார்த்தளவுக்கு நிகழ்ந்துள்ளதா என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.
கடந்த மாதம் 15ம் திகதி இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய- – இலங்கை உறவுகள் முன்னெப்போதையும் விட உச்சத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறியிருந்தாலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் உச்சமாக இந்தியா இதனைக் கருதுகிறதா என்ற சந்தேகம் இருக்கிறது.அதாவது இந்தியா எதிர்பார்க்கின்ற அளவுக்கு, நெருக்கத்தை பேண இலங்கை தயாராக இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்தும் விடயத்தில், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அவ்வளவாக நாட்டத்தைக் காண்பிக்கவில்லை. இது இருதரப்பு உறவுகளில் உள்ள இடைவெளியை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இணக்கப்பாடு காணப்பட்டதன் அடிப்படையில், சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்கும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்கள் அப்படியே கிடக்கின்றன.
இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.பலாலிக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்தியா முன்னெடுத்த தலைமன்னார்–- இராமேஸ்வரம் பாலத்தை அமைக்கும் திட்டத்துக்கும் இலங்கை அரசாங்கம் சிவப்புக்கொடி காண்பித்திருக்கிறது.
திருகோணமலையில் இந்தியாவின் கைத்தொழில் வலயம் அமையவுள்ளது என்று கூறப்பட்ட போதும், அதற்காக திருகோணமலை துறைமுகப் பகுதியில் உள்ள நிலங்கள் வழங்கப்படாது என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது, இந்தத் திட்டங்கள் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் சூழல் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடயங்களில் இந்தியாவின் எதிர்பார்ப்பு மிகையானதாகவே இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
சம்பூர் அனல் மின்திட்டத்தைப் பொறுத்தவரையில், உள்ளூரில் எதிர்ப்புகள் இருக்கின்ற நிலையில், அந்த திட்டத்தை இயற்கை எரிவாயு மின்திட்டமாக மாற்றுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார்.
உடனடியாகவே இதுகுறித்து ஆராயுமாறு இந்தியப் பிரதமர் தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.எனினும், இதுவரை காலமும், எந்த மின்திட்டத்தை முன்னெடுப்பது என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்யவுமில்லை, இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவுமில்லை.இலங்கை அரசாங்கத்தினால் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றே அண்மையில் இந்திய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
கடந்த ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது, வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தலைமன்னார் – – இராமேஸ்வரம், கொழும்பு – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனாலும், இதுவரையில் அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை. அதுபோன்றே, பலாலி விமான நிலையத்துக்கும், தென்னிந்தியாவில் இருந்து விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளும் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை.
இந்தநிலையில், கடந்தவாரம் பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான உடன்பாடு எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்று கூறியிருந்தார்.
பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பாக சாத்திய ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்றும் வந்து சென்றது.
அதுவெறும் ஆய்வு தான் என்றும், விரிவாக்கல் தொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
அதேவேளை பிரதியமைச்சர் நிரோசன் பெரேராவோ, பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அதற்கு பெருமளவு நிதி தேவைப்படும், இடம் தேவைப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் குழு பலாலி விமான நிலையத்தின் மேலதிக இடங்களை சுவீகரிக்காமல் அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறியிருந்தனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில் எல்லாம் இதுபற்றியும் கலந்துரையாடப்பட்டது.திடீரென பலாலியை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டமில்லை, அதுகுறித்து இந்தியாவுடன் உடன்பாடு செய்யவில்லை என்று அரசாங்கம் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணானதாக இருக்கிறது.
பலாலி விமான நிலையத்தை மாத்திரமன்றி, காங்கேசன்துறை துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதற்கும் இந்தியா இணங்கியிருந்தது. அண்மையில் நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுக்களிலும் இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.
ஆனால், கடந்த வாரம், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வெளியிட்ட தகவல், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கை தயங்குகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியின் போது, பொருளாதாரத்தை விட தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அர்ஜூன ரணதுங்க கூறியிருந்தார்.
இந்தியா இதனை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்ற போதிலும், இந்திய உபகண்டத்தில் இருந்து போதைப்பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் கடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதால் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதிலிருந்து, இந்தியாவுடன் நெருக்கமான போக்குவரத்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு குறிப்பாக வடக்குடன் நெருங்கிய தொடர்புகளை இந்தியா ஏற்படுத்திக் கொள்வதை கொழும்பு விரும்பவில்லை என்றே உணர்ந்து கொள்ள முடிகிறது.
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான திட்டம் ஒன்று குறித்து இலங்கையுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இந்திய அமைச்சர்கள் கூறியிருந்த போதிலும், அண்மையில் ஜனாதிபதியும், பிரதமரும் கூட அதனை நிராகரித்திருந்தனர்.
அத்தகையதொரு திட்டம் இல்லை என்றும், ஒருபோதும் அது சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.இந்தியா இந்த திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் சிலவற்றை முன்னெடுத்த நிலையில், இலங்கை அரசாங்கம் வெளியிட்ட இந்தக் கருத்துக்கள் ஆச்சரியத்தையே கொடுத்திருக்கின்றன.
இதுபோன்று தான், திருகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் கைத்தொழில் முதலீட்டு வலயம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் கூறிவந்தது.
அதுபற்றி இந்தியாவுடனும் ஆராயப்பட்டது.ஆனால் திருகோணமலை துறைமுகத்தை அண்டி முதலீட்டு வலயத்துக்கு காணிகள் வழங்கப்படாது என்று அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
அது நிச்சயம் இந்தியா எதிர்பாராத ஒரு விடயமாகவே இருக்கும்.திருகோணமலைத் துறைமுகப் பிராந்தியத்தின் மீது இந்தியா தனக்கு சிறப்பு அதிகாரம் இருப்பதாகவே கருதி வந்திருக்கிறது.
பிரதமர் ரணிலின் அந்த அறிவிப்பு இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.இவ்வாறாக நெருக்கமான பொருளாதார, வர்த்தக உறவுகள் அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவுடன் பௌதிக ரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ நெருங்கிக் கொள்வதற்கு கொழும்பு தயங்குகிறது.
இந்த விடயங்களில், திடீரென தற்போதைய அரசாங்கம் பின்வாங்க ஆரம்பித்துள்ளதும், சீனாவுடனான நெருக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும், வெளிப்பார்வைக்கு மஹிந்த அரசாங்கத்தின் காலத்தை நோக்கி தற்போதைய அரசாங்கமும் நகர்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இருதரப்பு உறவுகள் உச்சத்தில் உள்ளது என்று கூறப்படும் ஒரு நிலையில், இந்தியாவின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மாறான திசையில் கொழும்பு பயணிக்கத் தொடங்கியுள்ளமை ஆரோக்கியமான விடயமாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
இத்தகையதொரு சூழலில் தான் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக தரண்ஜித்சிங் சந்து நியமிக்கப்படவுள்ளார்.இவர் ஏற்கனவே 2001- – 2004 காலப்பகுதியில் இலங்கையில் பணியாற்றியவர்.
மீண்டும் அவரது இலங்கை வருகை, ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு சாதகமான ஒன்றாக இருக்காது என்றே பலரும் கணிக்கின்றனர்.
இந்தநிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-http://www.tamilwin.com