உண்மையான தகவல் தாங்கிகள் தேசத்தின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் விளைவிக்காமல் நன்கு திட்டமிடப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சில தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிப்பார்கள்.
ஆனால் எட்வர்ட் ஸ்னோடென் அப்படி செய்யவில்லை. மாறாக அமெரிக்க பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியவரே ஸ்னோடென் என வெள்ளை மாளிகையில் செய்தித்துறை செயலர் ஜோஷ் ஏர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடென் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஸ்னோடென் அமெரிக்காவின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியவரே தவிர உலகுக்கு ரகசிய தகவல்களை தெரிவிப்பவர் அல்ல .
அவருடைய நடத்தை அமெரிக்கர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம் ஸ்னோடென் அமெரிக்காவுக்கு திரும்பி அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
அமெரிக்க நீதித்துறைக்கு உட்பட்டு ஒரு கிரிமினில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு என்ன உரிமைகள் பொருந்துமோ அத்தனையும் ஸ்னோடெனுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால், பிரித்தானிய பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்னோடென் கோரியிருந்தார்.
ஆனால் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளரின் இந்த அறிவிப்பு அமெரிக்கா ஸ்னோடென் மீதான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் தங்கியிருக்கிறார் ஸ்னோடென். அவர் அங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் அவர் அமெரிக்காவுக்கு திரும்பச் சென்றால் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://news.lankasri.com