தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியல் யாப்பில் இலங்கை அரசாங்கம் முன்வைக்காமல் விட்டால் மீண்டும் ஆயுதமேந்த மாட்டோம், ஆனால் எம்மை ஆளமுடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
‘இன்றைய அரசியலும் பெண்களின் பங்களிப்பும்’ என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
புதிய அரசியல் சாசன ஆக்கத்தில் நாம் முக்கிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றோம். இம்முறை உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தின் மூலம் தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதுவரை நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் சாசனமும் தமிழ் மக்களுடைய ஆதரவுடனோ சம்மதத்துடனோ கொண்டுவரப்படவில்லை.
ஐ. நா சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டத்தின் சம்மதமில்லாமல் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது.
அந்தவகையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் முறையான அரசியல் தீர்வை புதிய அரசியல்சாசனம் கொண்டிருக்க வில்லையாயின் அதனை நாம் நிராகரிப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com