போர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்துவாரா சரத் பொன்சேகா?

fonsekaaமேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல் பல்வேறு பரபரப்பான தகவல்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள நிலையில், போர் தொடர்பாக தாமும் ஒரு நூலை எழுதி வெளியிடப் போவதாக கிளம்பியிருக்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

அவர் இந்த நூலை எழுதுவதற்கான முயற்சிகளை மிகச் சமீபகாலத்தில் தான் தொடங்கியிருக்கிறார் போலத் தெரிகிறது, ஆனாலும், அடுத்த ஆண்டில் நூலை எழுதி வெளியிட முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

போர் தொடர்பான அனுபவங்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை தானும் எழுத வேண்டும் என்ற ஆசையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குள் தூண்டி விட்டிருப்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவாகவே இருக்க வேண்டும்.

வேலைப் பளு காரணமாக இந்த முயற்சியில் தாம் இதுவரையில் ஈடுபடவில்லை என்றும், தற்போது நூலை எழுதும் பணிகளைத் தொடங்கியிருப்பதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான முழுமையான விபரங்களையும் நூலாக எழுதும் தகுதி படைத்த ஒருவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை விடவும், இராணுவ சேவையில் மூத்தவர் சரத் பொன்சேகா. அவர் இராணுவ சேவையில் இணைந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின்னர் தான், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இராணுவத்தில் இணைந்திருந்தார்.

புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருந்த அனுபவம், மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு கிடைத்திருக்கவில்லை.

அதைவிட, போரை முடித்து வைக்கும் கட்டத்தில் இராணுவத்தில் அதி உயர் பதவியில் இருந்தவர் சரத் பொன்சேகா, அவருக்குக் கீழ், ஒரு டிவிசன் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் தான் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.

எனவே இந்தப் போரில் எல்லாப் பரிமாணங்களையும் கூடுதலாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான்.

எனவே தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான அத்தனை விபரங்களையும் பதிவு செய்யும் தகுதிபடைத்த ஒரே ஒருவராக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளங்குகிறார்.

அவர் அந்தப் பொறுப்பை நேர்மையாகச் செய்வாரா, அவரது எழுத்துக்களில் உண்மை இருக்குமா என்றெல்லாம், இப்போது உறுதியாக கூற முடியாது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்து விலகி, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், இப்போது தான் அவருக்குள் போர் அனுபவங்களை நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் ஏற்பட்டிருக்கிறது.

நேரமின்மையை அவர் காரணம் காட்டியிருந்தாலும், சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தை அவர் அதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

பல அரசியல் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் சிறைச்சாலைக்குள் இருந்து எழுதிய நூல்கள் வரலாற்றுப் புகழைப் பெற்றிருக்கின்றன.

அதேவேளை, புலிகளுடனான போர் அனுபவங்கள் பற்றிய எழுதப்படக் கூடிய எத்தனை நூல்களும், வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்.

ஏனென்றால், இந்தப் போரில் அந்தளவுக்கு பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. சரத் பொன்சேகா இதுவரையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ‘கோத்தாவின் போர்’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியிருந்தார்.

அது ஒட்டுமொத்தப் போரினது வெற்றிக்கும் கோத்தாபய ராஜபக்சவே காரணம் என்று கூறும் வகையில் எழுதப்பட்ட நூலாகும்.

கோத்தாபய ராஜபக்சவை உயர்ந்த நிலை கதாநாயகனாக மாற்றுவதற்கு இதுபோன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் கூட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மௌனமாகவே இருந்தார்.

ஆனால், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ‘நந்திக்கடலுக்கான பாதை’ யை எழுதிய பின்னர் தான், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தானும் ஒரு நூலை எழுதப் போவதாக கூறியிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை முறைமுகமாக- போர் தொடர்பான இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வாறு இராணுவ இரகசியங்கள் வெளியிடப்படக் கூடாது என்றும் இராணுவ இரகசியங்களை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

போரின் உண்மைக் கதை என்று கூறித் தான் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலை வெளியிட்டிருக்கிறார்.

அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, போர் பற்றிய எந்த இரகசியத்தையும் தாம் வெளியிடவில்லை என்றும், அத்தகைய இரகசியங்கள் தாம் மரணிக்கும் போது மண்ணோடு புதைந்து போகும் என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பதில் கொடுத்திருக்கிறார்.

அவ்வாறாயின் நந்திக்கடலுக்கான பாதை எவ்வாறு உண்மைக் கதையாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இராணுவ இரகசியமாக இருக்காது என்று நினைத்ததை சரத் பொன்சேகா இராணுவ இரகசியமாக கருதியிருக்கலாம்.

இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போர் அனுபவம் பற்றி தான் எழுதக் கூடிய நூலில், ‘நந்திக்கடலுக்கான பாதை’யில் உள்ள தகவல்களை விடவும் குறைந்தளவான தகவல்களே உள்ளடக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஏனென்றால் , இராணுவ இரகசியங்களைப் பாதுகாப்பதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதியாக இருக்கிறார்.

ஏற்கனவே, இராணுவத்தில் இருந்த ஓய்வு பெற்ற பின்னர் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க போர் அனுபவங்கள் தொடர்பான ஒரு நூலை எழுதியிருந்தார்.

வேறு பல இராணுவ அதிகாரிகளும் ஓய்வு பெற்ற பின்னர் தமது அனுபவங்களை நூலாக வெளியிட்டிருந்தனர்.

இராணுவத்தில் இருக்கும் போது, இவ்வாறு நூல்களை எழுதி வெளியிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை சேவையில் உள்ள அதிகாரிகளால் வெளியிட முடியாது.

எனவே தான், சேவையில் இருந்து விலகிய பின்னர் பெரும்பாலான அதிகாரிகள் தமது அனுபவங்களை நூல்களாக எழுதி வெளியிட்டனர்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இராணுவத்தில் இருந்த போதே நந்திக்கடலுக்கான பாதையை எழுதினார்.

தாம் பதவியில் இருந்த போதே, அதற்குத் தேவையான தரவுகளையும் தகவல்களையும் இராணுவத் தலைமையகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

நூலை எழுதி, அச்சிட்டது வரை எல்லாமே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இராணுவத்தில் இருந்த போது தான் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு செய்ததால் தான் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மறுநாளே ‘நந்திக்கடலுக்கான பாதை’யை வெளியிட முடிந்தது.

ஆனால், இராணுவத்தில் இருந்து விலகி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் தொடர்பான நூலை எழுதத் தொடங்கியிருந்தாலும், அவர் போரின் முழுமையான பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் நூல் ஒன்றை எழுதுவாரா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால், அவர் தனது அனுபவங்களை வெளியிட வேண்டும் என்ற அர்ப்பணிப்பிலோ, ஆர்வத்திலோ இந்த முயற்சியில் இறங்கவில்லை.

ஒரு போட்டிக் களத்தில் இறங்கியுள்ளவர் போலத் தான் அவரும் நூலை எழுதக் கிளம்பியுள்ளார்.எனவே , அவரால் எந்தளவுக்கு கனதியான – – காத்திரமான நூல் ஒன்றை எழுத முடியும் என்ற கேள்வியும் சந்தேகமும் இருக்கிறது,

இன்னொரு பக்கத்தில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

போர் இரகசியங்களை வெளியிடக் கூடாது என்ற விடயத்தில் திட்டவட்டமான தீர்மானத்தில் இருக்கும் அவரால் வெளிப்படைத்தன்மையுடன் ஒரு நூலை ஒருபோதும் எழுத முடியாது.

போர் பற்றிய அனுபவங்களை வெளியிட விரும்பும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவாகட்டும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வாகட்டும், போர் இரகசியங்களைக் காப்பாற்றும் விடயத்தில் உறுதியான நிலையில் தான் இருக்கின்றனர்.

போர் முடிந்து விட்டது. ஆனாலும் போரின் இரகசியங்களை காப்பாற்றுவதில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளாக இருந்தவர்கள் அக்கறை காட்டுகின்றனர் என்றால், ஏராளமான இரகசியங்கள், இருக்கின்றன என்றே அர்த்தம்.

அந்த இரகசியங்கள் தமக்கும், இராணுவத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் தான், அவற்றைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் இந்தளவுக்கு முயற்சிக்கிறார்கள் என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

-என்.கண்ணன்

-http://www.tamilwin.com

TAGS: