மற்றுமொரு படகும் நடுக்கடலில் கவிழ்ந்தது! இதுவரை 42 பேர் பலி

refugees boat sinkஎகிப்து மத்திய தரைக்கடலில் பகுதிகளில் சட்டவிரோதமாக 600 அகதிகளுடன் பயணித்த கப்பல் நீரில் முழ்கியதில் 42 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய தினம் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 600 பேர் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக சட்ட விரோதமாக ஐரோப்பா நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எகிப்து நாட்டு பகுதியான கபர் அல் சேக் பகுதிக்குட்டபட்ட கடல் எல்லையில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது இதனால் பலர் உயிருக்கு போராடினர்.

எனினும் இது குறித்த தகவல் எகிப்து கடற்படையினருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 150 பேரை உயிருடன் காப்பாற்றியுள்ளதாகவும், 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகார பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்துவருவதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அகதிகளின் வருகை குறித்து ஐரோப்பா நாடுகளிள் தெளிவான தகவல் இல்லை எனவும், எனினும் காப்பாற்றப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இத்தாலி நோக்கி சென்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மத்திய தரைக்கடல் வழியாக சமீப காலங்களில் மக்கள் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த படகில் சென்றவர்கள் உண்மையில் அகதிகளாக கொண்டு செல்லப்பட்டனரா இல்லை அகதிகளாக கொண்டு செல்வதாக நம்பிக்கை அளிக்கப்பட்டு அவர்களை சட்ட விரோதமாக கடத்த முயன்றனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மத்திய தரைக்கடலில் இது போன்ற அகதிகள் படகுகள் கவிழ்ந்து இதுவரை பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதனால் அகதிகள் தொடர்பில் ஆராயவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

-http://news.lankasri.com