வடகொரிய ஜனாதிபதியை கொல்ல திட்டம்?

kim_jongஅணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து அணு குண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது.

கடந்த 9 ஆம் திகதி ஐந்தாவது முறையாக அணுகுண்டு சோதித்தது. இந்த அணுகுண்டு சோதனை, இதுவரை நடத்திய அனைத்து சோதனைகளிலும் சக்திமிக்கது என கூறப்படுகிறது.

இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்று விட்டதாகவும், இதைத் தொடர்ந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளில் அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி, எதிரியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்றுள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அதிர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தென்கொரியாவை பொறுத்தமட்டில் பாதுகாப்புக்கு அமெரிக்காவையே நம்பி இருக்கிறது. வட கொரியா 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து அமெரிக்கா தனது போர் விமானங்களை இரண்டு முறை தென்கொரியாவுக்கு அனுப்பி பறக்க வைத்து, அந்த நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தது.

இந்த நிலையில் தென்கொரிய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கடந்த புதன்கிழமை விவாதிக்கப்பட்டுள்ளது.

அப்போது, வடகொரியாவின் அணு ஆயுதங்களால் தென் கொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னை கொல்வதற்கு சிறப்பு படை பிரிவு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு தென் கொரிய ராணுவ மந்திரி ஹான் மின் கூ பதில் அளித்துள்ளார். நம்மிடம் அதற்கான திட்டம் உள்ளது. அந்த நாட்டின் தலைவரை மட்டுமின்றி, எதிரிகளின் இலக்குகளை வீழ்த்துவதற்கு ஏவுகணை வல்லமையை பயன்படுத்துவதற்கான திட்டம் நம்மிடம் உள்ளது என கூறினார்.

-http://news.lankasri.com