உலக இருதய தினம் செப்டம்பர் 29 – இருதய நோய் தடுக்கும் வழிமுறைகள்

World-Heart-Day-2016இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் தங்களது இன்னுயிரை இழப்பதாக கூறுகிறார்கள்.

அதில் 75 லட்சம் பேர் மாரடைப்பாலும் 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறக்கின்றனர்.

இளம் வயதில் ஏற்படும் இருதய நோய்கள் புகைப் பழக்கம், கட்டுப்பாடில்லாத மதுப் பழக்கம், முட்டை, இறைச்சி, நெய் போன்ற கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமான உடல் எடை, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

உலகில் 13 சதவிகித இருத நோயால் ஏற்படும் மரணங்கள் இரத்த அழுத்தத்தாலும், 9 சதவிகிதம் புகைப்பழக்கத்தாலும், 6 சதவிகிதம் நீரிழிவு மற்றும் உடற்பயிற்சியின்மையாலும், 5 சதவிகித மரணம் அதிக உடல் எடையால் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே இருத நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ தீய பழக்கங்களிலிருந்து நம்மை பாதுகாப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதாக புள்ளிவிவர கணக்கு கூறுகிறது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சியால் வயதிற்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதன் மூலம் இருதய நோயை நாம் கட்டுப்படுத்தலாம்.

எலுமி்ச்சம்பழ ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், திராட்சை பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி அருந்தி வந்தால் நம்முடைய இருதயம் நல்ல ஆரோக்கியம் அடையும்.

வாரத்திற்கு இருமுறை அல்லது மூன்று நாட்களாவது எளிதான யோகாசனம் மற்றும் மிதமான உடற்பயிற்சியும் இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

– Maalai Malar