சிறுவர் உரிமைகளை மறுப்பது பெரும்பாவம்! இன்று சிறுவர் தினம்

Childrens-Day-சிறுவர்கள் எமது செல்வங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எமது நாட்டின் வளங்களாக இருந்து பயன்தர இருப்பவர்கள். அதனால் எமது சிறுவர்கள் சமூகத்திலே மிக முக்கியம் பெறுபவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.

சிறுவர்கள் மீது அன்பு காட்டி ஆதரிக்க வேண்டியதும் அவர்களை ஒழுங்காக வளர்க்க வேண்டியதும் எம் அனைவரினதும் கடமையாகின்றது.

இந்நிலையில் அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதை அல்லது சுரண்டப்படுவதை எவரும் விரும்பமாட்டார்கள்.

அவ்வாறு செய்வது பெரும் பாவம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

உலகம் பல சவால்களை எதிர்நோக்கி வரும் இக்கால கட்டத்தில் சிறுவர் பிரச்சினைகள் பாரிய சவால்களாக வளர்ந்து வருகின்றன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்படுகிறது.

சிறுவர்கள் என்பவர்கள் இன்னொருவரின் அல்லது பலரின் வழிகாட்டல்களின் கீழ் வளர்க்கப்பட வேண்டியவர்கள்.

இது விடயமாக பெற்றோர், ஆசிரியர்கள், பெரியோர் மற்றும் குடும்பத்தவர்கள் அனைவரினதும் கவனம் மிகவும் அவசியமாகின்றது.

அதனால் சிறுவர்களின் சகல நடவடிக்கைகளையும் மிகவும் அக்கறையுடன் கவனித்து வரவேண்டும். சிறுவர்களின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இன்று அதிகமான சிறுவர்கள் ஒழுங்கான கல்வியைக் கற்று வருவதாக இல்லை. நற்பழக்க வழக்கங்களில் வளர்க்கப்படுவதாகவோ, வளர்வதாகவோ சொல்வதற்கில்லை.

வறுமை, நோய், உடன் தாக்கம் காரணமாக தங்கள் அருமை மிகு பிள்ளைகளை வைத்துவிட்டு வெளிநாடுகளில் உழைத்து பணம் சம்பாதிக்கின்றனர்.

கணவனும் மனைவியும் உழைக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் வேறு ஒருவரின் அல்லது பலரின் அல்லது குடும்பத்தவர்களின் பராமரிப்பின் கீழ் வளர்க்கப்படுகின்றார்கள். இதன் மூலமாக அதிகமான சிறுவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

கல்வியோடு ஒழுக்கம் நற்பழக்க வழக்கம் போன்றவற்றில் பயிற்சி பெற்று வர வேண்டிய இந்த சிறுவர்கள் தங்களைப் பராமரிக்க, நேர்வழி காட்ட எவரும் இல்லாத நிலையில் தவிக்கின்றனர்.

இன்னும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீடுகள், கடைகள், தொழில் நிலையங்கள் போன்றவற்றில் வேலைக்குச் சேர்த்து விடுகின்றனர். இதனால் இவர்கள் அதிகமான இடங்களில் தங்களது சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

பெற்றோரால் கைவிடப்பட்ட நூற்றுக் கணக்கான சிறுவர்கள் தங்களுக்கு அன்பு காட்டி ஆதரவு கொடுக்க எவரும் இல்லாத நிலையில் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றார்கள்.இதனால் இந்தச் சிறுவர்கள் இழிவான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அது மட்டுமல்ல புகைத்தல், போதைவஸ்து திருட்டு உள்ளிட்ட பல துர்நடத்தைகளுக்கு பழக்கப்பட்டு வருகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் அவசியம்.இல்லாவிட்டால் இவை எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்து விடலாம்.

பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கான அநாதை விடுதிகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தி அவர்களுக்கான எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது கட்டாயமாகும்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள்:

சிறுவர் துஷ்பிரயோகங்கள் இன்று உலகளாவிய ரீதியில் சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பதில் முக்கியமாக இடம்பெறுவது, அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதாகவும். அதாவது அவர்களது பிறப்புரிமையாக இருக்கும் கல்வியை வழங்காமலிருப்பது, தங்களது சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளை செய்யத் தூண்டுவது, சிறுவருக்கு வயதை மீறிய தண்டனைகள் வழங்குவது, அவர்களது சுதந்திரம் பறிக்கப்படுவது, கொடிய நடத்தைகளில் ஈடுபடுத்துவது, பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக சிறுவர்களை உட்படுத்துவது, அவர்களை பணத்துக்கு விற்பது, அவர்களைக் கடத்துவது… இவையெல்லாம் சிறுவர் துஷ்பிரயோகங்களில் அடங்குகின்றன.

அது மட்டுமல்ல. இவை பெரும் குற்றங்களாகவும் சமூக விரோத செயல்களாகவும் அமைந்து விடுகின்றன. அதனால் இப்படியான பெரும் குற்றங்களுக்கு காரணமாக இருக்கும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது.

பாடசாலைகளில் பயிலும் அதிகமான சிறுவர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு மத்தியில் கற்று வருகின்றார்கள். பாடசாலை முடிந்த வேளையில் அல்லது பாடசாலை விடுமுறை நாட்களில் இந்தச் சிறுவர்கள் பலரது வீடுகளிலும் தொழில் நிலையங்களிலும் வேலைகளுக்காக அமர்த்தப்படுகின்றனர்.

இதனால் இவர்கள் கல்வியில் காட்டும் அக்கறை வெகுவாக குறைந்து செல்வதற்கு அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்தச் சிறுவர்கள் கல்வி முன்னேற்றத்தில் உரிய இலக்கை அடைவார்கள் என்பது சந்தேகம் தான்.

வறுமை, நோய், கடன் காரணமாக தங்களது பிள்ளைகளையே வேலைகளுக்கு அமர்த்தி பணம் தேடும் பெற்றார்களை இன்றைய சமூகத்திலே எங்கும் காணக்கூடியதாக உள்ளது.

சிறுவர்களுக்கு அவர்கள் வயதுக்குரிய அடிப்படை வசதிகளையும் கல்வித் தேவைகளையும் செய்து கொடுப்பது மிகவும் முக்கியமாகும். இதை விடுத்து சிறுவர்கள் தங்களது வயதுக்கு மீறிய வேலைகளை செய்யத் தூண்டப்படுவதால் அவர்கள் உடல், உள ரீதியாக கடுமையான பாதிப்பை அடைகிறார்கள்.

வேலியே பயிரை மேய்வது போன்று சிறுவர்களை பராமரிக்க வேண்டியவர்களே அவர்களை தீய வழிகளில் ஈடுபடுத்தினால் அவர்களின் கதி என்னவாகும்?

இன்று பாரிய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களின் கடந்த காலத்தை நோக்கினால் அவர்களில் பெரும்பாலானோர் தங்களது சிறுவர் பராயத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் மூலம் அறியக் கிடைக்கிறது.

பாலியல் துஷ்பிரயோகங்கள்:

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகவும் மோசமான, வெட்கக்கேடான நிகழ்வாக இருக்கிறது. இந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் குற்றமாக இருப்பது பாலியல் துஷ்பிரயோகங்களாகும்.

இவ்வாறான சம்பவங்கள் நாடடில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இந்நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உறவினர்கள், அயலவர்கள், படித்தவர்கள், உயர் மட்ட அதிகாரிகள் என இனம் காணப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களை நாளாந்த ஊடகங்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தங்களிடம் கல்வியை நாடி வரும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திக் கொள்ளும் ஆசிரியர்களும் தாம் பெற்ற புதல்விகளையே மோசப்படுத்தும் தந்தையரும் ஒரே வயிற்றில் பிறந்த சகோதரிகளையே மோசப்படுத்தும் சகோதரர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவதாகவும் அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இவை வெட்கக் கேடானதும் மனவேதனைக்குரியதுமான நிகழ்வுகளாகும்.

இன்று நாட்டிலுள்ள அதிகமான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வைத்துவிட்டு வெளிநாடுகளில் உழைத்து வருகின்றனர். இச் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இந்தச் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திக் கொள்பவர்கள் பலர் உள்ளனர்.

எந்தச் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களே தகுந்த பாதுகாப்புக்குரியவர்கள். இது தவிர சிறுவர் பாதுகாப்பு விடயத்தில் வேறு எவரையும் நம்புவது தவறு. இது விடயமாக மிகுந்த சிந்தனையோடு செயல்படுவது மிக அவசியம்.

சிறுமியர்கள் மற்றவர்களால் இலகுவாக ஏமாற்றப்படக் கூடிவர்கள். தூர சிந்தனை இல்லாதவர்கள் பாலியல் தொடர்பாக தங்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் எதையும் சொல்லக்கூடிய புரிந்துணர்வு அற்றவர்கள்.

இந்நிலைமைகளை பயன்படுத்தியும் ஒரு சிலர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.

இவையெல்லாம் மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட குற்றங்கள். இதனை நாம் வன்மையாக எதிர்க்க வேண்டும். அது தொடர்பான இயக்கங்கள் எற்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

-http://www.tamilwin.com