ஹிட்லர் போன்று நடந்து கொள்வேன்: மிரட்டல் விடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!

யூதர்களை ஹிட்லர் கொன்றொடுக்கியதுபோல போதை கும்பலையும் அழித்தொழிக்க தயங்கமாட்டேன் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ எச்சரித்துள்ளார்.

தலைநகர் மணிலாவில் பேசிய அவர், ஹிட்லரின் உறவினராகவே தன்னை கருவதாக குறிப்பிட்டார். ஹிட்லர் 30 லட்சம் யூதர்களை கொன்றொடுக்கினார். பிலிப்பைன்ஸ் முழுவதும் 30 லட்சம் போதை ஆசாமிகள் உள்ளனர். அவர்களை மொத்தமும் கொன்றழிப்பது தமக்கு மகிழ்ச்சியே என ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

கடந்த யூன் மாதத்தில் ரோட்ரிகோ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் போதை மருந்து கடத்தல்காரர்கள் மற்றும் பயன்படுத்துவோர் என 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி போதை மருந்து பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை தெருவோரம் வீசியுள்ளது பொலிஸ்.

போதை மருந்து கடத்துபவர்களை தூக்கிலேற்றி அவர்களின் தலை உடலில் இருந்து வேற்படும்வரை தொங்கவிடுவதாகவும் ஜனாதிபதி ரோட்ரிகோ முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் ஜனாதிபதி ரோட்ரிகோவின் பேச்சுக்கு யூத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது பேச்சு, கொண்ட பதவிக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி யூதர்கள் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இது ஒட்டுமொத்த இனத்தையே துன்புறுத்தும் செயல் எனவும் யூத தலைவர்கள் கண்டவனம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

ஜனாதிபதி ரோட்ரிகோவின் பேச்சுக்கு யூத தலைவர்கள் மட்டுமல்ல, இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை வசைபாடிய விவகாரத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகளால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்தது. மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றமும் ஜனாதிபதி ரோட்ரிகோவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com