எழுக தமிழும் தெற்கின் அதிர்வலைகளும்!

elukatamil-2தென்னிலங்கை அரசியல் களத்தில் இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தான் பிரதான கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 24ம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வு மற்றும் அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்களை முன்னிறுத்தி கட்சி வேறுபாடின்றி தெற்கிலுள்ள எல்லா அரசியல்வாதிகளும் இப்போது அவரைத் தான் பந்தாடுகின்றனர்.

மிகப் பிரமாண்டமான பல எழுச்சி நிகழ்வுகளைக் கண்டது வடக்கு மாகாணம். அவற்றுடன் ஒப்பிடுகையில் எழுக தமிழ் ஒன்றும் மிகப்பெரிய நிகழ்வு இல்லாவிடினும், இப்போதைய சூழலில் எழுக தமிழ் என்பது முக்கியமானதொரு நிகழ்வாக அமைந்திருந்தது.

எழுக தமிழ் நிகழ்வின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்துவதும் தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதும் தான்.

அரசியல் கைதிகள் விவகாரம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை, காணாமற்போனோர் குறித்த விசாரணை, மீள்குடியமர்வு, பொதுமக்களின் காணிகள் ஒப்படைப்பு, வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் போன்ற விடயங்களுடன், தமிழ் மக்களின் இறைமை ஏற்றுக்கொள்ளப்பட்ட சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு ஒன்றை வலியுறுத்தியே இந்த எழுக தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டது.

எழுக தமிழ் நிகழ்வில் முன்னிறுத்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் தமிழர் தரப்பினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருஐகின்ற விடயங்கள் தான். தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆனாலும் இந்த நிகழ்வு தென்னிலங்கை அரசியல் களத்தில் எதிர்மறையான கருத்துக்களைத் தோற்றுவித்திருக்கிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஜே.வி.பி.யின் தலைவர்கள் என்று தென்னிலங்கையின் அனைத்து அரசியல் சக்திகளும் இதனை பூதாகாரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மாத்திரம் இந்த விடயத்தைப் பற்றி எதுவும் பேசாமல் அடக்கி வாசிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரினது பார்வையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே உள்ளது.

வடக்கில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று கோருவதையும், பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் விகாரைகள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையும், வடக்கு முதல்வரின் இனவாதப் பிரசாரமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொந்தளிக்கிறார்கள்.

தெற்கிலுள்ள அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசியல் வேறுபாடுகளின்றி கூக்குரல் எழுப்பும் அளவுக்கு வடக்கில் இருந்து இனவாதக் குரல்கள் எழும்பவில்லை.

தமிழர்கள் தமது உரிமைகளைக் கோருவதும், தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதும் இனவாதமாக தெற்கில் பார்க்கப்படுகிறது. இது தவறானதொரு அளவுகோல் ஆகும்.

தமிழர்களுக்கு தமது உரிமைகளைக் கோரும் சுதந்திரம் இருக்கிறது. அதற்காக குரல் கொடுக்கும் உரிமை இருக்கிறது. தமது நிலங்கள் பறிக்கப்படுவதற்கும், தமது நிலங்களில் நடக்கும் அத்து மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும் உரிமை உள்ளது. எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்றவர்கள் அந்த உரிமைகளின் அடிப்படையில் தான் பங்கேற்றனர்.

தமது உரிமைகளைக் கோருவதற்கும், தமக்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கும் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் கருதி வந்ததால் தான் இப்படியொரு நிகழ்வை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கிறது.

தமிழர்கள் தமது உரிமைகளுக்காக அணிதிரளுவதை தெற்கிலுள்ள எந்த அரசியல் சக்தியும் விரும்பவில்லை என்பதையும், அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையுமே இவர்களின் கூச்சல்கள் உணர்த்தியிருக்கின்றன.

இந்த நிகழ்வையும், வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்துக்களையும் வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் புலிகள் மீண்டும் வரப் போகிறார்கள் என்றும், தமிழீழம் உருவாகப் போகிறது என்றும் அடுத்த பிரபாகரனாக மாறுவதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார் என்றும் தீவிரமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் மூலம் சிங்கள மக்கள் உசுப்பேற்றப்படுகிறார்கள். நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ள சூழலில் தெற்கிலுள்ள இனவாத சக்திகளின் உணர்வுகளை எழுக தமிழ் கிளறி விட்டிருப்பதாக அரசாங்கத்தில் உள்ளவர்களும் அரசாங்கத்துக்கு வால் பிடிப்பவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமலும் இல்லை. எழுக தமிழ் நிகழ்வுக்குப் பின்னர் தெற்கில் இனவாதப் பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. என்பது மறுக்க முடியாத உண்மை.

பல்லுப் பிடுங்கிய பாம்பாக இருந்த பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் தமிழர்களை தமிழ் நாட்டுக்கே மீண்டும் துரத்தியடிப்போம் என்று எச்சரிக்கின்ற அளவுக்கு மாறியிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச அணியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில் போன்றவர்கள் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தைத் தீவிரமாக கக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கு எழுக தமிழ் நிகழ்வும் ஒரு காரணம் தான் என்றாலும் இவர்களெல்லாம் முன்னர் இனவாதம் பேசாமல் இருந்தனர் என்று கூற முடியாது.

தென்னிலங்கைச் சிங்கள இனவாதிகள் இந்த நிகழ்வைச் சாட்டாக வைத்துக் கொண்டு உசுப்பேற்றி விடப்பட்டிருக்கிறார்கள். இது அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளில் நிச்சயமாக பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

எழுக தமிழின் பெரும்பாலான கோரிக்கைகள் எந்தளவுக்கு நியாயமானவையோ அதுபோலவே இந்த நிகழ்வினால் தெற்கில் இனவாதாம் உசுப்பேற்றி விடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் நியாயமானதே.

இந்தக் கட்டத்தில் தான் ஒரு கேள்வி எழுகிறது. தென்னிலங்கையில் இனவாதம் கிளம்பும் என்பதற்காக தமிழர்கள் தமது நலனுக்காக உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடாமல் இருக்க முடியுமா என்பதே அந்தக் கேள்வி.

தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராட முற்படும் போது அது சிங்கள இனவாத சக்திகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதும், அதுவும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது இத்தகைய போராட்டங்கள் சிக்கலான நிலையை ஏற்படுத்தும் என்பதும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட விடயம் தான்.

இந்தக் காரணத்தைக் கூறியே தமிழரசுக் கட்சி இதில் பங்கேற்காமல் நழுவியிருந்தது.

தமிழர் தரப்பின் நலனுக்காக ஒன்றுபட்டு குரலை எழுப்ப வேண்டிய தருணம் ஒன்று ஏற்படுகின்ற வேளைகளில் ஒதுங்கிக் கொள்வது எந்தளவுக்கு நியாயமற்றதோ அது போலவே பொருத்தமற்ற தருணமொன்றில் போராட்டத்தை நடத்தி குழப்பங்கள் ஏற்படக் காரணமாவதும் நியாயமற்றது தான்.

இந்த வகையில் எழுக தமிழ் தமிழர்களின் உரிமைக்காக தொடர் போராட்டங்களுக்காக பரிணாமம் பெற்ற ஒன்றாக இருக்கப் போகிறதா அல்லது தென்னிலங்கை இனவாதிகளை தட்டியெழுப்பி அரசியல் ரீதியான தீர்வு முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்த நிகழ்வு என்ற பெயரைச் சுமந்து கொள்ளப் போகிறதா?

எழுக தமிழ் தனியே சிங்களப் பேரினவாதத்தை உசுப்பேற்றும் ஒன்றாக மட்டும் இருந்து விடுமேயானால், அது ஒருபோதும் தமிழர்களின் நலனுக்கான செயற்பாடாக இருக்க முடியாது.

இது எந்த வகையிலான நிகழ்வாக அமையப் போகிறது என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: