எப்போதாவது கணவர் வருவார் – சமூகத்தின் கேலி கிண்டலால் வலியின் உச்சகட்டத்தில் மனைவிமார்

எவராலும் கண்டு கொள்ளப்படாத ஒரு தரப்பாக தாம் ஆக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் துயரம் வெளியிட்டனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் இன்று இடம்பெற்ற காணாமலாக்கப்பட்டோரில் தங்கி வாழ்ந்த உறவினர்களுக்கு உளநல ஆலோசனை வழங்கும் நிகழ்வில் சிரேஷ்ட நிபுணத்துவ உளநல மருத்துவர் ரீ.கடம்பநாதன் முன்னிலையில் அவர்கள் தமது இந்த கருத்தினை தெரிவித்தனர்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது உன்னிச்சை, ஆயித்தியமலை, கரவெட்டியாறு, கரடிப்பூவல், இராஜதுரை நகர், பாவற்கொடிச்சேனை, நாவற்காடு, மகிழவெட்டுவான் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட சுமார் 35 இற்கு மேற்பட்டோரின் உறவினர்கள் இந்த உளநல ஆற்றுப்படுத்தல் ஆலோசனைக் கருத்துப் பகிர்வில் கலந்து கொண்டார்கள்.

அங்கு தொடர்ந்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்ட காணாமல் போனோரின் உறவினர்கள் சொல்லொண்ணாத் துயரங்களைச் சுமந்து கொண்டு தாங்கள் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினர்.

மேலும் பிடித்துச் செல்லப்பட்ட தமது கணவன்மார் உயிருடனிருந்து எப்போதாவது வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தாங்கள் இன்னமும் நெற்றிப் பொட்டோடு வாழ்வதாகவும் தங்களுக்குள் ஒரு விதமாகவும், தமது பிள்ளைகளுக்கு இன்னொரு விதமாகவும், தங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கு வேறு விதமாகவும் தாங்கள் நடித்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

நெற்றிப் பொட்டு என்பது தங்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்குவதாகத் தெரிவித்த அவர்கள், ஆனால் அந்த நெற்றிப் பொட்டைக் கூட சாற்றிக் கொண்டு ஆலயங்களுக்குச் சென்று மன ஆறுதலைப் பெறுவதற்கும், காரியாலயங்களுக்குச் சென்று அலுவல் முடிப்பதற்கும், வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்வதற்கும் கூட சில விஷம சக்திகள் இடைஞ்சலாய் இருந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

தமது ஆதங்கங்களை வெளிப்படுத்துவதற்குக் கூட தாங்கள் அஞ்சிப் பயந்து வாழ்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சமூகத்திலுள்ள ஒரு சாராரின் கேலியும் கிண்டலும், அதிகாரிகளின் புறக்கணிப்பும், வறுமையும், வாழ்க்கைப் போராட்டமும் தங்களை அதிக நெருக்கடிக்கும் விரக்தி நிலைக்கும் இட்டுச் செல்வதாக அவர்கள் கூறினர்.

அன்றாடம் கூலித் தொழில் செய்து தமது பிள்ளைகளுக்கான ஜீவனோபாயத்தைத் தேடும் வாழ்க்கை வலியின் உச்சத்திற்கே தாங்கள் செல்வதாகவும் அவர்கள் துயரக் கண்ணீர் விட்டனர்.

இதேவேளை குறித்த ஆலோசனை கூட்டத்தில் புவனேஸ்வரி செல்வகுமார் என்ற காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் மனைவி கருத்து தெரிவித்த போது,

கணவன் காணாமலாக்கப்பட்டு 6 பிள்ளைகளோடு வாழ்க்கைப் பேராட்டத்தை நடத்தும் எனது வீட்டை நான்கு தடவைகள் காட்டு யானை தாக்கி சேதப் படுத்தியுள்ளது.

நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காலங்கழித்து வருகின்றேன். உடலில் ஏராளமான வருத்தங்களைச் சுமந்து கொண்டு அன்றாடக் கூலி வேலை செய்து ஜீவனோபாயத்தைக் கழிக்கின்றேன்.

ஆனால் அரசோ அரச சார்பற்ற நிறுவனங்களோ தனக்கு உதவவில்லை எனவும் 46 வயதுடைய புவனேஸ்வரி செல்வகுமார் கவலை தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவுகள் பலர் தினமும் கவலைப்பட்டு ஒரு வித மனநிலைப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறான பலர் தனிமையில் உரத்துக் கதைப்பதையும், முன்னுக்குப் பின் முரணாகக் கதைப்பதையும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருப்பதையும் அறிய முடிந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: