பத்துத் தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியையடுத்து தென்னிலங்கையில் உருவான பரபரப்பை ஓரளவு தணிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன்.
வட பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாதெனவும், பௌத்த மதத் தலங்கள் நிர்மாணிக்கப்படலாகாது எனவும் ‘எழுக தமிழ்’ பிரகடனத்தின் போது முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் சமீப தினங்களாக பெரும் பதற்றம் உருவாகியிருக்கின்றது.
விக்னேஸ்வரன் தனது இக்கருத்தை மீளப்பெற வேண்டுமென தென்னிலங்கை அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேசமயம் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறும், அவரைக் கைது செய்யுமாறும் மற்றொரு தரப்பினர் கோஷமெழுப்பி வருகின்றனர்.
இலங்கை அரசியலில் கடந்த வாரம் முழுவதும் பரபரப்புக்குரிய விவகாரம் இதுதான்.
விக்னேஸ்வரன் தெரிவித்ததாகக் கூறப்படும் இக்கூற்றானது ஒரு தரப்பினருக்கு அனுகூலமாகவும், மற்றொரு தரப்பினருக்கு பிரதிகூலமாகவும் அமைந்திருந்தமை இங்கு முக்கியமான விடயம்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையும், புதிய அரசியலமைப்பையும் ஏற்படுத்துவதில் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்ற அரசாங்க தரப்பைப் பொறுத்தவரை விக்னேஸ்வரனின் அறிவிப்புகள் சங்கடமும் நெருக்கடியும் கொண்டவையாகும்.
இனவாத சக்திகளின் வலையில் வீழ்கின்ற சிங்கள மக்களைச் சாந்தப்படுத்துவது இலகுவான காரியமல்ல.
அதேசமயம் வடக்குத் தமிழ் மக்களை நோகடிக்காத விதத்தில் சிங்கள மக்களின் சீற்றத்தைத் தணிப்பதும் முக்கியம்.
இவ்விடயத்தில் அரசாங்க தரப்பு சங்கடத்துக்கு உள்ளாகியிருந்த அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தரப்புக்கும் விக்னேஸ்வரனின் அதிரடி அறிவிப்பானது சிக்கலுக்குரியதாகவே இருந்தது.
உத்தேச அரசியல் யாப்பை எவ்விதத்திலாவது செயலுருப்படுத்த வேண்டுமென்பதில் முனைப்புடன் செயற்படுகின்ற மனோநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
இவ்வாறான நிலையில் விக்னேஸ்வரன் மீதான சிங்கள சமூகத்தின் எதிர்ப்பலைகள், உத்தேச அரசியல் யாப்புக்கு எதிராகவும் திரும்பி விடக் கூடுமென்ற கவலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமீப தினங்களாகக் கொண்டுள்ளதென்பது உண்மை.
இவ்வாறான பரபரப்புக்கு மத்தியில் தென்னிலங்கை அரசியலின் கொதிநிலையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் ஓரளவு தணித்திருக்கிறார்.
தேசிய விளையாட்டு விழா நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வேளையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தனது பெரும் மனஆதங்கமொன்றை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
‘எழுக தமிழ்’ நிகழ்வில் தன்னால் கூறப்பட்ட விடயங்களை தென்னிலங்கை இனவாதிகள் திரிபுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.
வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படக் கூடாதென்றோ, பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படக் கூடாதென்றோ தன்னால் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லையென விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இராணுவத்தின் பின்னணியுடன் பலவந்தமான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையே தாங்கள் எதிர்ப்பதாகவும், சிங்கள மக்கள் வசிக்காத இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கான தேவை இல்லையெனவுமே தனது உரையில் குறிப்பிட்டதாகவும் விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் விளக்கமளித்துள்ளார்.
வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதாக இருந்தால் உள்ளூராட்சி சபைகளின் முறைப்படியான அனுமதியுடன் காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு குடியேற முடியுமென்பது தனது கருத்து என்பதே விக்னேஸ்வரனின் விளக்கமாகும்.
தனது உரையை சிங்கள இனவாத சக்திகள் திரிபுபடுத்தி அரசியல் சுயஇலாபத்துக்குப் பயன்படுத்துகின்றனரென ஆதங்கப்படுகிறார் விக்னேஸ்வரன்.
தேசிய விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகப் பங்கேற்ற ஜனாதிபதி முன்னிலையில் மாத்திரமன்றி, அங்கு திரண்டிருந்த சிங்கள இளைஞர், யுவதிகள் மத்தியிலும் விக்னேஸ்வரன் தனது ஆதங்கத்தை சிங்கள மொழியில் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயம்.
அதுமாத்திரமன்றி இனங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கும் விதத்தில் பெரும்பான்மை இனவாத சக்திகள் திரிபுபடுத்தும் செய்திகளை வெளியிட்டு வருவதாக தனது வேதனையையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
‘எழுக தமிழ்’ நிகழ்வினால் தெற்கில் உருவான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் முதல்வரின் விளக்கம் அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது.
அதேசமயம் பெரும்பான்மையின இனவாத சக்திகளை சிங்கள மக்கள் முழுமையாகப் புரிந்து கொள்வது அவசியமென்பதும் இங்கு புரிகிறது.
-http://www.tamilwin.com