ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புதிய பொதுச்செயலராக போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா. மன்றம் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக தென்கொரிய நாட்டை சேர்ந்த பான்-கி-மூன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இதையடுத்து, புதிய பொதுச்செயலரை தெரிவு செய்யும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் போர்த்துகல் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார்.
இவருக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் தற்போது ஐ.நா., சபையின் அகதிகள் அமைப்பின் தலைவராக உள்ளார். கட்டரஸ் வரும் ஜனவரி மாதம் ஐ.நா., பொதுச்செயலராக பதவி ஏற்க உள்ளார்.
யார் இந்த ஆன்டோனியோ கட்டரஸ்?
பொறியியல் பட்டதாரியான கட்டரஸ் 1976 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டில் ஜனநாயக தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலில் அரசியலுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் ஆற்றிய சிறப்பான செயல்பாடுகளால் சோசலிச கட்சியின் தலைவராக 1992 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 1995 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் பிரதமராக தெரிவானார்.
2005 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அகதிகள் முகமைக்கு தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
உலகின் மிக மோசமாக அகதிகள் பிரச்னை நிலவும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளில் தமது முகமையை இட்டுச்சென்றார்.
இந்த காலகட்டங்களில் மேற்கத்திய நாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், அகதிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று.
-http://news.lankasri.com