யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் அரசியலமைப்பினை மீறும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதனையும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிடவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு முரணான வகையில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்து கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரான தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அந்த விடயம் தொடர்பில் விளக்கமொன்றை அளித்துள்ள இரா.சம்பந்தன், “சி.வி.விக்னேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருக்கவில்லை. இந்த விடயத்தைச் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாம் அந்த எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொள்ளவுமில்லை. அதில் கலந்துகொள்ளாமல் இருந்தமைக்கு எம்மிடம் உரிய காரணங்களும் உண்டு.
இதேநேரம், வடக்கிலும் அதேபோல், கிழக்கிலும் உள்ள மக்கள் நீண்ட காலமாக பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவற்றில் மிகவும் விரைந்து தீர்க்கப்பட வேண்டிய பல நியாயபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. இவ்வாறான விடயங்களில் அரசாங்கத்தின் மந்தகதியான செயற்பாடு குறித்து அதிருப்பதி தெரிவித்து, இந்த சபையில் நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முறையிட்டிருக்கிறேன். அந்த விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
எழுக தமிழ் நிகழ்வைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பேச்சு, அச்சு மற்றும் இலத்திரனியல் என இரு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. அந்த வகையில், அவர் கூறியதாக காரணம் கூறப்படும் அனைத்து விடயங்களையும் அவர் அங்கு பேசியிருந்தார் என்று நான் கருதவில்லை. உண்மையில், தாம் கூறியதாக காரணம் கூறப்பட்ட விடயங்களுக்கு, அவர் பின்னர் மறுப்பும் வெளியிட்டிருந்தார்.
சி.வி.விக்னேஸ்வரனின் பேச்சு, தமிழில் கிடைத்தது. நான் அதை தமிழில் வாசித்திருந்தேன். அந்த வகையில், எனது நிலைப்பாடு என்னவென்றால், அவர் கூறியதாக காரணம் காட்டப்படும் பல்வேறு கருத்துக்களும் அவரால் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை”என்றுள்ளார்.
-http://www.puthinamnews.com