பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முன்னாள் உதவியாளர் எண்ட்ரு கிளாஸ்டரை அழைத்து வந்துள்ளார். கிளாஸ்டர், ரபிசியின் என்ஜிஓ-வான இன்வோக்குடன் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுப்பார்.
கிளாஸ்டர் 2012-இல், ஒபாமா அதிபர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் களமிறங்கியபோது அவரது தேர்தல் பரப்புரைக் குழுவின் துணைத் தலைமை ஆய்வியல் அதிகாரியாக பணியாற்றினார்.
“வாக்காளர்கள் குறித்த தகவல்களைக் கொண்டு எங்களின் ஆதரவாளர்கள் யார், அவர்களை எப்படி எங்கள் வழிக்குக் கொண்டுவரலாம் என்பதை ஆராய்வோம். அதன்பின்னர் அதற்கேற்ப செயல்படுவோம்”, என கிளாஸ்டர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அவர் நேற்றிரவும் கோலாலும்பூரில் பக்கத்தான் ஹராபான் விளக்கமளிப்புக் கூட்டமொன்றி கலந்து கொண்டார்.