ஆஃப்கானிஸ்தானில் குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் பெண்கள் வீட்டு வேலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கான தனிச்சிறைச்சாலைகள் இல்லாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது பக்திகா மாகாணம். பெரும்பாலும் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள இந்த மாகாணத்தில் முறையான நீதிமன்றங்கள் இல்லை.
குற்றங்களில் ஈடுபடும் பெண்களை சிறைவைக்கத் தேவையான சிறைச்சாலைகளும் இல்லை. இதனால், தண்டனை விதிக்கப்படும் பெண்கள் இப்பகுதியில் உள்ள சில தனிமனிதர்களின் வீட்டு வேலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் பாவ்சியா என்ற 18 வயது பெண், பெற்றோரின் அனுமதியின்றி காதலனைத் திருமணம் செய்ததற்காக பஞ்சாயத்தார் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.
பெண்களுக்கான சிறைச்சாலைகள் இல்லாததால், காலீல் ஜத்ரான் என்ற பழங்குடியினத் தலைவர் ஒருவர் வீட்டில் தண்டனைக் காலத்தைக் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைகளைச் செய்வதற்காக ஊதியம் எதுவும் வழங்கப்படாது.
ஆனால், இது போன்று தண்டனை பெற்ற மேலும் சில பெண்களை காவல்துறையினரே அழைத்து வந்து இவரிடம் ஒப்படைத்ததாகவும், தண்டனை காலம் முடியும் வரை வீட்டு வேலைகளைச் செய்த பின் அவர்களை விடுவித்ததாகவும் கலீல் ஜத்ரான் கூறுகிறார்.
இப்படி தண்டனை பெற்ற பெண் ஒருவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கும் அவர், இனிமேலும் இதுபோன்ற பெண்களை தமது வீட்டில் விட்டால் ஏற்கத் தயார் என்றும் கூறுகிறார்.
தண்டனை பெறும் மேலும் சில பெண்கள் காவல் துறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தண்டனைக் காலம் முடிந்தபின் சமூகத்தினர் ஏற்கமறுப்பதால் அந்த பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிடுகிறது.
எனவே பக்திகா மாகாணத்தில் பெண்களுக்கு என தனிச் சிறை வேண்டும் என்கிறார் பெண்கள் நலத்துறைத் தலைவர் பி.பி. ஹவா.
பக்திகாவில் கடந்த ஆண்டு பெண்கள் தவறிழைத்ததாக 16 வழக்குகள் மட்டுமே வெளி உலகுக்குத் தெரியவந்தன. திருட்டு, கொலை உள்ளிட்ட பிற குற்றங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு அப்பகுதி மக்களே கடுமையான தண்டனை விதித்து அதை நிறைவேற்றினர்.
இது தொடர்பாக ஏராளமான மனித உரிமை மீறல் புகார்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
-http://news.lankasri.com