மலையக மக்கள் தொடர்பான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் எழுத்து மூலமான அறிக்கையாக முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா குழுவினரிடம் இந்த பேச்சுவார்த்தையின் போது நாடு முழுக்க சிதறி வாழும் சிறுபான்மையினா் எதிர்நோக்கும் தேர்தல் பிரதிநிதித்துவமும் விசேட ஒதுக்கீடுகள், மலையக தமிழ் இனத்தின் மிகவும் பின் தங்கிய பிரிவான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகள், சர்வதேச சமூகத்தை ஐ.நா. சபை வலியுறுத்த வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக எடுத்து கூறப்படும் என தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டம் தொடர்பான முன்னறிக்கையில் எனது அமைச்சுக்கு போதிய நிதியை ஒதுக்குவதில் ஒரு குறைப்பாடு ஏற்பட்டது. அதேபோல் எனது அமைச்சின் பணிகளில் முன்னறிவித்தல் இன்றி ஒரு முன்னாள் அரசியல்வாதி தலையிடும் நிலைமையும் ஏற்பட்டது எனக் கூறினார்.
அத்துடன், தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் நாம் அரசாங்கத்திற்கு வெளிப்படையாகவே உரிய அழுத்தங்களை கொடுத்து வருகிறோம் என்றும் எமது இனத்தின் மிகவும் பின் தங்கிய பிரிவினரின் வாழ்வாதார விவகாரத்தில் அரசியல் செய்ய நாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மையினர் என்ற முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய அறிக்கையாளர் ரீட்டா ஐசக் குழுவினருக்கு, புதிய உள்ளூராட்சி கட்டமைப்புகள், காணி உரிமை, வீடமைப்பு, மொழியுரிமை உட்பட மலையக சிறுபான்மை மக்களின் உரிமை தேவைகள் பற்றி எடுத்துக்கூற தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருக்கிறது எனவும் அவா் உரையின் போது குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com