தமிழ் மக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பு – யோகேஸ்வரன்

yogeswaranதமிழ் மக்கள் தமது அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க ஏற்ற விதத்தில் சிவசேனா அமைப்பை ஸ்தாபித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சிவசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் அண்மையில் வவுனியாவிலே இலங்கையில் இருக்கின்ற இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் தர்ம கர்த்தாக்கள், சமயப் பெரியார்கள் போன்ற முக்கியமானவர்களை அழைத்து ஒன்று கூடல் ஒன்றை நடாத்தினோம்.

இதில் மலையகம், கொழும்பு, வடக்கு – கிழக்கு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர் எனக் கூறினார்.

அத்துடன் அவர், இந்த அமைப்பில் நாங்கள் மூன்று இணைத் தலைவர்கள் இருக்கின்றோம். திருகோணமலையைச் சேர்ந்த அகத்தியர் சுவாமிகளும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய நானும் சச்சிதானந்தம் அடிகளாரும் இருக்கின்றோம் என உறுப்பினர்கள் பற்றியும் கூறினார்.

மேலும், இது ஒரு மத அமைப்பு. இதன் நோக்கம் எமது பகுதியில் பலவிதமான அச்சுறுத்தல்களை தமிழ் மக்களும், இந்து மக்களும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நாங்கள் ஆர்வம் காட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

அவா் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று சிங்கள மக்கள் மத்தியில் பொதுபலசேனா என்கின்ற அமைப்பு இந்த நாட்டின் தேசிய இனங்களுக்கு பல வழிகளில் அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டும், மத உரிமைக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு அகிம்சை வழியில் சென்று எமது இனத்தினதும் அடையாளத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவே இந்த சிவசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அமைப்பு ஆரம்பகட்டமாக இரண்டு வருடங்களை முன்னிலைப்படுத்தி இயங்கும். இரண்டு வருடங்களுக்குள் பல விடயங்கள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை நீண்டகாலத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்பவில்லை என அமைப்பினுடைய கால வரையறை பற்றியும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: