பார்டி அமனா நெகரா (அமனா), பெர்சே பேரணியில் பாஸ் கட்சியினர் கலந்துகொள்வதை ஊக்குவிக்க அக்கட்சியின் முன்னாள் ஆன்மிகத் தலைவர் நிக் அசீஸ் நிக் மாட்டின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்கட்சியின் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, நவம்பர் 19 பெர்சே பேரணியில் பாஸ் கட்சியினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று கூறியதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
“அவரது (நிக் அசிஸ்) நிலைப்பாடு நிரந்தரமானதல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியதுதான். பாஸ் பெர்சே 5-இல் கலந்துகொள்வதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
“எனவே, தோக் குரு (நிக் அசிஸ்) சொன்னதை இப்போது நினைவுபடுத்த வேண்டியதில்லை”, என்றவர் சொன்னதாக உத்துசான் கூறியது.
முந்தைய பெர்சே பேரணிகளுக்கு நிக் அசீஸ் ஆதரவு கொடுத்திருப்பதை நினைவுறுத்தி எதிர்வரும் பேரணிக்கு பாஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று அமனாவின் கிளந்தான் ஆலோசகர் ஹுசாம் மூசா கேட்டுக் கொண்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.