அவசர காலச்சட்டம் இல்லாத போது துப்பாக்கிச் சூடு எவ்வாறு? – பொலிஸாரின் எல்லை மீறிய செயல்

avasara kaalamஅவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத போது மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா, வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமான சம்பவம் தொடர்பில் இவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை ஒன்றின் முலமாகவே இதனை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குற்றங்களை கட்டுப்படுத்துகின்றோம் எனும் போர்வையில் பொலிஸாரின் எல்லை மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவசரகாலச்சட்டம் என்பது நடைமுறையில் இல்லாத போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும். இதே வேளை பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் போன்றோரும் வன்முறைகளில் ஈடுபடாது துரித நீதி பெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணை செய்து தண்டிப்பதன் ஊடாகவோ நாம் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள முடியாது. எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் தடுக்கவோ முடியாது.

இதேவேளை இவ்வாறான பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் வெறும் கண்துடைப்பு விசாரணைகள் நடைபெற்ற வரலாற்றையும் எம்மால் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

ஆகவே இந்த அசம்பாவிதம் நடைபெறுவதற்கு அடிப்படை காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்கபூர்வமான விசாரணைக்குழு அமைத்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

மரணமான மாணவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர்களது பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உட்பட அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறிக்கொள்கின்றோம்.

மேலும் இந்த விடயத்தினை நாங்கள் ஒன்றாக வெளியிடுவதற்கான காரணம் வடக்குமாகாணசபை அரசியல் பேதங்கள் அற்று இந்த விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது. என்பதனை எடுத்துக் காட்டுவதற்காகவே. எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: