வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர்

sr armyவடக்கில் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நிலைகொண்டிருப்பது மீண்டும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

இதனால் வடபகுதி மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளை செவ்வனே மேற்கொள்ள முடியாதவர்களாகவும் சுதந்திரமாக செயற்பட முடியாதவர்களாகவும் இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அநாவசியமான புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டு வருவதும் பொது விடயங்களில் கூட தங்கள் தலையீடுகளை மேற்கொள்வதும் வழமையான ஒன்றாகவுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக அப்பாவி பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்து அதில் பல வருடக்கணக்கில் நிலைகொண்டுள்ளது மாத்திரமன்றி, அவற்றை மீள வழங்கவும் படையினர் மறுத்தும் வருகின்றனர். அதேவேளை புதிய காணிகள் ஆக்கிமிக்கப்பட்டு மறைமுகமாக இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வடபகுதியில் புதிய புதிய பௌத்த விகாரைகள் அமைக்கப்படவும் எல்லைப்புறங்களில் சிங்கள பெரும்பான்மை மக்கள் குடியேற்றப்படவும் தென்பகுதி மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடிப்பது மாத்திரமன்றி வடபகுதி மீனவர்களுக்கு இடையூறாக செயற்படுவதற்கும் பின்னணியாக படையினரே இருந்து வருவதாக வடபகுதி மக்கள் பிரதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இவை அனைத்துக்கும் மத்தியில் வடபகுதி மக்களின் விளைநிலங்களை அபகரித்து அதில் பயிரிட்டு உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாகவும், இதனால் உள்ளூர் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

வடபகுதியில் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமையானது மக்களின் சகஜ வாழ்வுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளமை தொடர்பில் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நிலையிலும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தனது லண்டனுக்கான விஜயத்தின் போதும் இராணவ பிரசன்னம் குறித்து பிரஸ்தாபித்திருந்தார்.

வடமாகாணத்தில் ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் வரையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமையானது வன்முறைக்கான அடித்தளத்தை இடுவதாக மாத்திரமன்றி மக்களின் நிலங்கள் வாழ்வாதாரங்கள் வர்த்தக வளங்கள் ஆகியவற்றை பறித்தெடுப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

வடபகுதி தமிழ் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற மறைமுக நிகழ்ச்சி நிரலுடனேயே இதுவரை பதவிக்கு வந்த அத்தனை அரசுகளும் செயற்பட்டு வந்துள்ளதுடன் தொடர்ந்தும் செயற்படுகின்றன என்று கூறும் தமிழ் மக்கள் இலங்கை இராணுவமானது முற்றுமுழுதாக பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட இனரீதியான அமைப்பாகவே இருந்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறைந்த பட்சம் இனரீதியாகவேனும் சமநிலை பேணப்பட்டிருப்பின் சர்வதேசத்தின் சந்தேகப் பார்வை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இலங்கை இராணுவம் விலகியிருக்க வாய்ப்புள்ளதாகவும் எடுத்துரைக்கப்படுகின்றது.

உண்மையில் கூறப்போனால் தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில் உருவான உள்நாட்டு யுத்தம் கூட இனரீதியான சிந்தனையுடன் அடக்கி ஒடுக்கப்பட்டது மாத்திரமன்றி இன்றும் கூட இனவாதச் சிந்தனைகளே மேலோங்கியுள்ளதைக் காண முடிகின்றது.

இதன் காரணமாகவே யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் முரண்டு பிடிப்பதுடன் படையினரைப் பாதுகாப்பதிலேயே அரசாங்கம் முனைப்பாக இருந்து வருகிறது.

எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பினும் படையினரைப் பாதுகாக்காவிட்டால் இராணுவப் புரட்சி ஏற்பட்டுவிடும் என்று கருதும் அளவுக்கு சென்றுள்ளமையானது நாட்டில் நீதி நியாயம் எந்தளவுக்கு உறுதி செய்யப்படும் என்ற நியாயமான சந்தேகத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே அண்மையில் ஜனாதிபதி படையினர் தொடர்பில் ஆற்றிய உரை இருவேறுபட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதுடன் நல்லாட்சியின் பயணம் தொடர்பிலும் ஒருவித விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

படையினரையும் பேரினவாதிகளையும் சாந்தப்படுத்துவதன் வாயிலாக மாத்திரமே இந்த நாட்டில் ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது போன்றதோர் நிலைமையானது எந்த வகையில் சிறுபான்மை தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு நீதியையோ நிவாரணத்தையோ பெற்றுக்கொடுக்கப் போகின்றது என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியுள்ளது.

நாட்டின் தற்போதைய நடப்புக்கள் சர்வதேச ரீதியிலும் இவ்வாறான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் வடபுலத்திலுள்ள படையினரின் எண்ணிக்கையைக் குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைக்க வேண்டும் என்று வலியுறத்தியுள்ள போதிலும் அது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் இலங்கைக்கு பத்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்ட ஐநா வின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா கருத்து தெரிவிக்கையில், முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்துக்கு அப்பாற்பட்ட மிக அதிகளவிலான பிரசன்னமானது வடமாகாணத்தில் இராணுவத்தை ஒரு ஆக்கிரமிப்பு படையாகக் காட்டுகின்றது. அது மாத்திரமன்றி இது தமிழர்களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறு படுத்துவதாகவும் உள்ளது என்றும் கூறலாம்.

இலங்கைக்கு கடந்த 10ம் திகதி விஜயம் மேற்கொண்ட இவர் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று அரசியல் நிலைவரங்களை நேரடியாகப் பார்வையிட்டதையடுத்தே இந்தக் கருத்தை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டமானது தமிழ் மக்களைப் பெரிதும் பாதித்த ஒன்றாகக் காணப்படுகின்றது என்று கூறியுள்ளதுடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்ட தமிழ் பேசும் மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா.சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவின் கூற்று பேரினவாதிகளுக்கு மிகுந்த எரிச்சலூட்டும் ஒன்றாக இருந்தாலும் கூட அதுதான் உண்மையான நிலை என்பதையும் உலகின் ஒட்டுமொத்தமான அபிப்பிராயமாக உருவாகி வருகின்றது என்பதையும் நினைவில் கொள்வது அவசியமாகும்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையிலும் இராணுவ பிரசன்னம் எந்த வகையிலும் குறைக்கப்படாதமையும் நல்லாட்சி அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் நிலவும்ஹ தாமதங்களும் உள்நாட்டில் மாத்திரமன்றி சரவ்வதேச ரீதியிலும் புருவத்்தை உயர்த்திப் பார்க்கும் நிலைமையையே தோற்றுவித்துள்ளது என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெறுமனே குறித்ததோர் பிரதேசத்தில் பெருமளவு இராணுவம் நிலைகொள்ளுமானால் அது ஆக்கிரமிப்பு இராணுவம் போன்றே உலகின் கண்களுக்கு காட்சியளிக்குமத் என்பதையும் அரசு மறந்து போகக்கூடாது.

அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்கள், நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயற்படும் நிலைமை உருவாகும் பட்சத்திலேயே சர்வதேசத்திலிருந்தும் எழும் இத்தகைய விமர்சனங்களிலிருந்தும் விஜடுபடக் கூடியதாக இருக்கும்.

இன்றேல் முன்னைய அரசுக்கு சர்வதேச ரீதியில் உருவான களங்கத்தைப் போன்றதோர் நிலைக்கே தற்போதைய அரசும் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்பதே யதார்த்தம்.

-http://www.tamilwin.com

TAGS: