தமது ஓய்வூதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் எனக்கூறி கொழும்பில் யுத்தத்தில் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கூட்டு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தமது பூரண ஆதரவை வழங்குவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டும் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய தினம் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்க சிங்கள ராவய மற்றும் அனைத்து பிக்குகள் அமைப்பும் அங்கவீனமடைந்த இராணுவத்தினரோடு இணைந்து கொண்டனர்.
இதன் போது சிங்கள ராவய அமைப்பின் பிக்கு ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இராணுவ வீரர்கள் என்பவர்கள் இந்த நாட்டின் உயிர்த்துடிப்பு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நாம் பார்த்தோம் அதனால் இந்த அநீதிக்கு எதிராக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
சரியாக மூன்று நாள் மட்டுமே இந்த அரசிற்கு நாம் கால அவகாசம் வழங்குகின்றோம் அதற்கு மேல் அவகாசம் கொடுக்கமாட்டோம். இதற்காக நாம் சாகவும் தயாராக இருக்கின்றோம்.
ஆங்காங்கே இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர். ஆனாலும் நாய்களைப்போல் அவர்கள் துரத்தியடிக்கப்படுகின்றார்கள். மூன்று நாட்களுக்குள் அரசு முடிவு ஒன்றினை எடுக்காவிட்டால் ஏற்படும் அபாயமான விளைவுகளுக்கு நாம் பொறுப்பல்ல.
அதற்கு பின்னர் நாம் பிழை என எவரும் கூறக்கூடாது சிறையில் எம்மை அடைக்கவும் எவரும் முற்பட வேண்டாம் சிறைக்கு செல்லவும் நாம் தயார் அங்கு சென்றும் போராடுவோம் என கடுமையான தொணியில் பிக்கு எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-http://old.tamilwin.com