இதோ அதிரடி மாற்றங்கள்…! மும்மூர்த்திகளின் கையில் உலகம்

001இந்த வாரத்தில் அதிரடிக்கு பஞ்சமேயில்லை. சொல்லி வைத்ததைப் போன்று பலரின் வாய்களும் இந்த விடையங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன.

இந்த வாரம் முழுவதும், ஏன் அடுத்த வாரங்களுக்கும் இந்த பேச்சு அடிபடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஒவ்வொருவாரமும் ஒரு விடையம் சமூக வலைத்தள வாசிகளுக்கு தீனியாகக் கிடைக்க, முன்னர் பேசப்படும் விடையம் அப்படியே அடிபட்டு இல்லாம் போய்விடும். அப்படியே அந்த விவகாரம் மறைந்து போக இன்னொரு விடையம் சபைக்கு வரும்.

அந்த வகையில் தான் இந்த வாரம் வந்திருக்கும் முக்கியமான இரு விடையங்களால் சமூக வலைத்தள வாசிகள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.

முதலாவதாக, இந்தியாவில் இனிமேல் 500, 1000 ரூபாய்கள் செல்லுபடியாகாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முந்தினம் இரவு அதிரடியாக அறிவித்ததில் இருந்து இப்போது வரை அதன் சஞ்சலிப்பு குறைந்தபாடில்லை.

இந்த அறிவிப்பை அதிரடியாக விடுத்துள்ள பிரதமர் மோடி, கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டை இல்லாமல் செய்யவுமே இந்த நடவடிக்கை என்று சொல்லியிருக்கிறார்.

அவரின் அறிவிப்பால் இந்திய தேசம் எங்கும் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தவித்ததை காண முடிந்தது. இப்பொழுது வரை நிலமை இன்னமும் சீராகவில்லை.

மோடியின் இந்த அதிரடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கறுப்புப் பணமும் கள்ள நோட்டும் ஒழியும் என்று வாதாடும் தரப்பு ஒருபுறம் இருக்க, இன்னொரு தரப்போ அதற்கு சாத்தியமில்லை என்று கச்சை கட்டிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த தருணத்தில் தான் இன்னொரு சர்ச்சைக்குரிய யாரும் எதிர் பார்க்காத ஒரு செய்தி வெளிவந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி க்ளின்டன் வெற்றி பெறுவார் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில், டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றியீட்டி அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கிறார்.

அவர் வெற்றி பெற்றதால் எழுந்திருக்கும் சலசலப்புக்குக் காரணம் அவரின் தேர்தல் பிரச்சாரம். தேர்தலில் வெற்றி பெற்று இப்பொழுது உலகத்தையே தன்பால் ஈர்த்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ரஸ்ய அதிபர் புட்டினுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வேன் என்று தெரிவித்திருந்ததும் அமெரிக்காவில் வேற்று நாட்டவர்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்த கருத்தும் தான்.

இந்நிலையில் தான் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த அறிந்த விடையங்கள் தொடர்பில் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நீண்டகாலமாக அமெரிக்காவோடு பலப்பரீட்சையில் இருந்த ரஸ்யாவோடு புதிய அமெரிக்க ஜனாதிபதி நட்புறவு பாராட்டுவேன் என்று அறிவித்திருப்பது அமெரிக்க அதிபர்களில் இவரின் செல்வாக்கு இனிமேல் எப்படியிருக்கும்? அவரின் நகர்வினால் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களில் மாற்றங்கள் நிகழுமா என்பது தொடர்பில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் வெளிநாட்டு நாடுகள் மீது ஒபாமா அரசாங்கம் கொண்டிருந்த பார்வையில் இருந்து நிச்சையமாக டொனால்ட் ட்ரம்பின் பார்வை மாறும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பிலை்லை.

அவர் தன்னுடைய அரசியல் பாதையை வேறு கோணத்தில் அணுகுவார் என்பது தான் இப்போதைய வாதமாக மாறியிருக்கிறது. பார்க்கலாம் டொனால்ட் ட்ரம்ப் – புட்டின் நட்புறவு எதை சாதிக்கப் போகின்றது என்பதை?

இன்னொரு புறத்தில் மோடி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இதுவரை காலமும் விமானம் ஏறி நாடு நாடாக சுற்றினார் மோடி என்று சமூகவலைத்தளங்களில் கழுவி ஊற்றியவர்கள் எல்லாம் இப்பொழுது அவரின் இந்த நடவடிக்கை சரியானதென்று வாதாடும் அளவிற்கு நிலமை வந்திருக்கிறது.

இது எந்தளவு மாற்றத்தைக் கொண்டு வந்து விடப்போகின்றது என்பது அடுத்தொரு வாரத்தில் தெரியவரும். ஆனால் இது சாத்தியமில்லை என்றும், கறுப்புப் பணத்தையோ அன்றி கள்ள நோட்டுக்களையோ ஒழிக்க இது சிறந்த வழியல்ல என்றும் இன்னொரு தரப்பு வாதாடுகிறது.

இதேவேளை பிரதமர் மோடி, பணக்கார முதலாளி வர்க்கத்தினரை காப்பாற்றியிருக்கிறார் என்றும், அவரின் இந்த அதிரடியால் நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசும் தரப்பும் இருக்கவே செய்கின்றது.

இந்நிலையில் தான் இந்த வாரம் சூடுபிடித்திருக்கும் இந்த வாதம் அடுத்த வாரத்திற்கு நீடித்து நிலைக்குமா என்பது சந்தேகம் தான்.

ஆனால், இந்த மும்மூர்த்திகளாக இன்றைய கால மற்றும் எதிர்கால அரசியல் தலைவர்களாக மாற்றத்தைக் கொண்டுவருவார்களா என்பதை வரும் காலங்கள் பதில் சொல்லும்.

ஆனால், அமெரிக்காவில் நேற்றைய தினம் ஏற்பட்ட மாற்றம் நிச்சையமாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பிரதிபலிக்கும் என்பது சர்வநிச்சையம்.

காரணம் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கப்போகும் ட்ரம்ப் தன்னுடைய புதிய கொள்கையால் பல்வேறு அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். முக்கியமாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ட்ரம்ப்பின் வெற்றியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஒபாமா அரசாங்கம் சற்று பிடிவாதமாகவே இருந்தது. மேலும் மகிந்த ஆட்சியை மாற்ற இந்திய தேசத்தோடு சேர்ந்து காரியத்திலும் இறங்கியது.

இதேவேளை, ஒபாமா அரசாங்கம் இந்திய அரசோடு நல்லுறவை பேண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அதை இனி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள புதிய அதிபர் எவ்வாறு கையாளப்போகின்றார் என்பதை வைத்து தான் இலங்கை அரசியலில் பிரதிபலிக்கும் என்பதும் உண்மை.

ஆக, இன்றைய நாயகர்களாகவும், நாளைய நாயகர்களாவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப், புட்டின் மும்மூர்த்திகளாக உலகில் செல்வாக்குச் செலுத்துவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 -http://www.tamilwin.com