தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் தனது 16 வயதினை பூர்த்தி செய்ததன் பின்னர் ஆயுதம் ஏந்தப் போவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து முன்னாள் போராளிகள் பலரையும் அவரது உறவினர்கள் இராணுவத்தினரிடம் கையளித்திருந்தனர். மற்றும் பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.
எனினும், அவ்வாறு இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை இது வரையிலும், கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. அல்லது எங்கே என்று சொல்ல முடியாதளவுக்கு போயுள்ளது.
மேலும், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் வகையிலான விவசாயம் மற்றும் சலூன் போன்ற தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இராணுவத்தினரது கடமை என்பது நாட்டை பாதுகாப்பதாகும். அதைவிடுத்து வடக்கில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறுவர்களின் எதிர்காலங்களை வீணடிக்கும் வகையில் முன்பள்ளிகளை நடத்துகின்றனர்.
இதனிடையே, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அப்படியானால் எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்…? இந்த நாட்டிலே நீதி கிடைக்குமா..? குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமுடியாது என ஜனாதிபதி கூறும் போது, அவரின் சொல்லுக்குள் மறைந்திருக்கும் செய்தி என்ன…?
தமது தேச விடுதலைக்காக, இன விடுதலைக்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அது உங்களின் பார்வையில் பயங்கரவாதமாக இருந்தது. உலகத்தின் பார்வையில் அது பயங்கரவாதமாக இருந்திருக்கலாம்.
ஆனால் தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் விடுதலைக்காக போராடினார்கள். அது பயங்கரவாதம் கிடையாது. முதலில் பயங்கரவாதம் என்ற சொல்லை நீக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com