டிரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.

இதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், டிரம்ப் புதிய அமைச்சரவை அமைப்பதில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக தனி குழுவை அமைத்து அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியலை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் தெற்கு கரோலினாவில் இரண்டாவது முறையாக ஆளுநர் பதவி வகிக்கும் நிக்கி ஹாலேவை சந்திக்க உள்ளாராம். இதனால் அவர் அமைச்சர் ஆவது கிட்டத்தட்ட உறுதி எனவும் கூறுகின்றனர்.

இதே போன்று இதற்கு முன்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூசியானா மாகாணத்தின் முன்னாள் ஆளுனரான பாபி ஜின்டாலும் டிரம்ப் அமைச்சரவையில் இடம் பெறுவர் என கூறப்பட்டிருந்தது.

இதனால் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்புக்கு பென்கார்சன் மற்றும் ஜிண்டால் பெயர் பரீசிலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ஜிண்டால், டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில் அமெரிக்காவில் அமைச்சராகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

-http://news.lankasri.com