100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி உடலை பாதுகாக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி

மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையின் மருத்துவ வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மருத்துவ வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்த பிரிட்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிய நிலையிலும் எதிர்காலத்தில் உயிர்பிழைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறி தனது உடலை உறைநிலையில் பாதுகாக்க விரும்பினார்.

ஆனால், ஏற்கனவே விவாகரத்து பெற்றிருந்த அவளது பெற்றோரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த விவகாரம் லண்டன் ஐகோர்ட்டுக்கு சென்றது.

மரணப் படுக்கையில் இருந்த அந்த சிறுமி தனது விருப்பம் குறித்து நீதிபதிக்கு கடிதம் எழுதினாள். அதில், “எனக்கு இப்போது 14 வயதுதான் ஆகிறது. நான் சாக விரும்பவில்லை. ஆனால், நான் இறந்துகொண்டிருப்பதை அறிவேன். அதேசமயம், நான் நீண்டகாலம் வாழ ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் எனது புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, நான் உயிர்பிழைக்கலாம் என நினைக்கிறேன்.

எனவே, என் உடலை ‘கிரையோஜெனிக்’ முறையில் பதப்படுத்தி வைத்தால் 100 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட எனது நோய் குணமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனது உடலை புதைக்க விரும்பவில்லை” என அந்த சிறுமி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தாள்.

 

 

இவ்வழக்கை விசாரணையின்போது அந்த சிறுமியின் தாயார் ஒப்புதல் அளித்தார். முதலில் நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்த தந்தையும், ஒருவழியாக மகளின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதித்தார். இதனையடுத்து, சிறுமி இறந்தபின்னர் உடலை கிரையோஜெனிக் முறையில் பதப்படுத்த நீதிபதி ஜாக்சன் அனுமதி அளித்தார்.

இந்த தகவல் கடந்த மாதம் 6-ம் தேதி சிறுமியிடம் தெரிவிக்கப்பட்டது. மரண வேதனையிலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்த சிறுமி, தனது கடைசி ஆசையை நிறைவேற்றிய நீதிபதியை சந்திக்க விரும்பினார். அதன்படி மறு நாளே சிறுமியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அந்த சிறுமி ‘ஹீரோ’ என மிகவும் பாசத்துடன் அழைக்க, நெகிழ்ந்து போனார் ஜாக்சன்.

அதன்பின்னர் அக்டோபர் 17-ம் தேதி அந்தசிறுமி மரணம் அடைந்தாள். ஐகோர்ட் உத்தரவின்படி உடல் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கிரையோஜெனிக் முறையில் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் பதப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுமியின் உடல் இவ்வாறு பதப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பதப்படுத்தப்படும் உடலானது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திசுக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com