குடிமக்களுக்கு துரோகம் செய்கிறாரா பிரித்தானிய மகாராணி?

Queen-Elizabeth-IIபிரித்தானிய நாட்டில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணத்தை செலவிடுவதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பக்கிங்ஹாம் அரண்மனையை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் அடுத்த 10 ஆண்டுகள் நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

மேலும், ஆண்டுதோறும் மகாராணிக்கு அரசாங்கம் அளித்து வரும் நிதியில் இருந்து 370 மில்லியன் பவுண்ட்(6790,64,78,880 இலங்கை ரூபாய்) தொகை இந்த புணரமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

அரச குடும்ம்பத்தினருக்கு சொந்தமான மாளிகையை புணரமைக்க பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக மார்க் ஜான்சன் என்பவர் ஒரு ஓன்லைன் கையெழுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, ‘பிரித்தானிய நாடு முழுவதும் சொந்தமாக வீடுகள் கட்டிக்கொள்ள முடியாமல் குடிமக்கள் திணறி வருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல், தேசிய மருத்துவமனையில் போதிய நிதியுதவி இல்லாமல் வளர்ச்சி பணிகள் முடிவையாமல் உள்ளன.

இதுபோன்ற ஒரு சூழலில் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி மகாராணி தனது அரண்மனையை சீரமைப்பது மக்களுக்கு எதிரான செயல்.

மகாராணியின் தனிப்பட்ட சொத்தை இன்றளவும் மதிப்பிட முடியாது. இவ்வளவு சொத்து வைத்துள்ள மகாராணி அதில் இருந்து பணத்தை செலவிட்டு அரண்மனையை புதுபிக்கலாமா?’ என மார்க் ஜான்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போது வரை இந்த போராட்டத்திற்கு 15,000 பேர் வரை ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதனை மேலும் தீவிரமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com