ஹாடி ஷரியா நீதிமன்ற மசோதாவை தாக்கல் செய்தார்; விளக்கம் அடுத்த மார்ச்சில்

Hadi&hisbillபாஸ் தலைவர் அப்துல் ஹாடலவாங் அவரது ஷரியா நீதிமன்றத்தை வலுப்படுத்துவதற்கான திருத்தப்பட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆனால், இன்றுடன் நாடாளுமன்ற கூட்டம் முடிவுறுதால் அவரது மசோதாவுக்கு அடுத்த மார்ச் நாடாளுமன்ற கூட்டத்தில் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியதாயினும், இதில் ஏராளமான கேள்விகளும் விவாதங்களும் இன்னும் இருக்கின்றன. ஆகையால், இதற்கான விளக்கத்தை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் அளிக்க விரும்புவதாக ஹாடி கூறினார்.

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

அமனா நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஜாகிட் யுசுப் ராவா மற்றும் காலிட் சாமாட் ஆகிய இருவரும் மக்களிடையே நிலவும் கருத்து வேற்றுமையை களைவதற்கு இன்றே விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

“நான் காலிகளைக் கடந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். நான் இதை இன்றே விவாதிக்க விரும்புகிறேன்”, என்று காலிட் சாமாட் கூறினார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காலிட்டை சிலர் சூழ்ந்துகொண்டு கலாட்டா செய்தனர்.

பண்டிகார் இக்கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை.

திருத்தப்பட்ட மசோதா குற்றங்களுக்கு 30 வருடம் சிறை தண்டனை (தற்போது 3 வருடம்); அபராதம் ரிம100,000 (தற்போது ரிம5,000); கசையடி 100 (தற்போது 6) ஆகியவற்றுக்கு வகைசெய்கிறது.